
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
விளக்கம்: வேதா டி. ஸ்ரீதரன்
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகடலரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே. (5)
பொருள்
மலர்த் தோட்டங்களில் உறங்கிக் கொண்டிருந்த பறவை இனங்கள் துயில் எழுந்து கீச்சிடத் தொடங்கின. இரவு கழிந்தது. காலை மலர்ந்தது. கீழ்த்திசைக் கடலின் அலையோசை எங்கும் வியாபித்தது. தேன் வண்டுகளின் ஆனந்த கோஷத்தில் சொக்கி நின்ற பலவித மலர்களையும் துளசியையும் தொடுத்து உருவாக்கப்பட்ட அழகிய மாலைகளுடன் வந்திறங்கிய தேவர்கள் உன் அடி தொழுவதற்காகக் காத்திருக்கின்றனர். லங்கேசனாகிய விபீஷணனால் தொழப்படுபவனே, எம் இறைவனே, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!
அருஞ்சொற்பொருள்
பொழில் – சோலை
புட்கள் – புள் இனங்கள் (பறவைகள்)
கங்குல் – இரவு
புலரி – காலை
களிவண்டு – தேன் குடித்த ஆனந்தத்தில் உள்ள வண்டு
மிழற்றிய – இசைத்த
கலம்பகம் புனைந்த – பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட
அலங்கல் – மாலை, துளசி
தொடையல் – மாலை
மொழி அழகு
கலம்பகம் என்பது ஒருவகை இலக்கியத்தையும் குறிக்கும். எனவே, களி வண்டு மிழற்றிய என்பதை உருவகமாகக் கொண்டு, ‘தேன் குடித்த வண்டுகள் செய்த ரீங்காரத்தைப் போல பக்திக் களிப்பில் எழுந்த பாக்களால் தொடுக்கப்பட்ட பாமாலை’ என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே, இந்த வரிகளை, ‘பக்திக் களிப்புடன் தொடுக்கப்பட்ட பூக்களுடன் கூடிய துளசி மாலை’ என்றோ, ‘பக்தியுடன் செய்யப்பட்ட பாமாலை, துளசி மாலை ஆகிய இரண்டும்’ என்றோ பொருள் கொள்ளவும் இடமுண்டு. அமரர்கள் என்பது இறவாப் புகழ்பெற்ற அடியார்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.