சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம் :-
திவ்யமான சௌந்தர்யலஹரியை நமக்களித்தவர் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர். ஆதி சங்கரர் என்று கூறிய உடனே நம் அனைவருக்கும் ‘ஜகத்குரு’ என்ற பாவனை ஏற்படுகிறது. ‘ஜகத்குரு’ என்ற சொல்லுக்குச் சரியான பொருள் ஆதிசங்கரரிடமே கிடைக்கிறது.
உலகிலுள்ள ஞானம், தத்துவ சாஸ்திரம், தரிசன சாஸ்திரம் அனைத்திற்குமான கருத்தொற்றுமை ஆதிசங்கரரின் சித்தாந்தத்திலேயே அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி, பாரத நாட்டின் கலாச்சாரத்தில் அவர் கை பட்டு மிளிராத சம்பிரதாயமே இல்லை எனலாம். அவர் மூலமாகவே நம் நாட்டு கலாச்சாரம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
“ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாதம் சங்கரம் லோக சங்கரம்”
சுருதி, ஸ்ம்ருதி, புராணம் – இம்மூன்றும் சேர்ந்ததே பாரத தேசத்தின் வேத விஞ்ஞானம். நம் நாட்டு கலாச்சாரத்தின் சின்னமே ஆதிசங்கரர் தான்.
ஆதி சங்கரரின் நூல்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1.பாஷ்ய நூல்கள். 2. பிரகரண நூல்கள். 3. தோத்திர நூலகள். பாஷ்ய கிரந்தங்கள் என்றால் உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை இவற்றுக்கான உரை. இவற்றுக்கு பிரஸ்தான த்ரயம் என்று பெயர்.
பிரகரண கிரந்தங்கள் ஏக ஸ்லோகி முதல் சஹஸ்ர ஸ்லோகங்கள் வரை உள்ளன. அவற்றுள் முக்கியமானவை விவேக சூடாமணி, அபரோக்ஷானுபூதி, சர்வ வேதாந்த சித்தாந்த ஸங்க்ரஹம் முதலியவை.
அடுத்து ஸ்தோத்திர நூல்கள். இவை அளவில்லாமல் அபாரமாக உள்ளன. நம் நாட்டில் யாருக்காவது சிறிதளவு பக்தி இருந்தால் கூட அவருக்கு சங்கரரின் ஸ்தோத்திரத்தில் ஏதோ ஒன்றாவது தெரிந்திருக்கும்.
ஸ்ரீ ஆதிசங்கரர் நமக்களித்துள்ள ஸ்தோத்திரங்களுள் மாணிக்கம் போன்றவை சிவானந்தலஹரியும் சௌந்தர்ய லஹரியும்.
அவர் எழுதிய பாஷ்யங்கள் மூளையை மெருகேற்றுகின்றன. அவர் அளித்துள்ள ஸ்தோத்திரங்கள் இதயத்தை உருக்குகின்றன. ஒன்று புத்தியோடும், மற்றொன்று இதயத்தோடும் சம்பந்தப்பட்டவை. புத்தியும் இதயமும் வேறு வேறல்ல. ஞானமும் பக்தியும் ஒன்றே.
சௌந்தர்ய லஹரி நூல் எழுதப்பட்டதைப் பற்றிய குறிப்பு சங்கர விஜயம் மூலம் தெரிய வருகிறது. ஆதி சங்கரர் ஸ்ரீ வித்யையை பிரம்ம வித்யையாக நிலை நிறுத்தியுள்ளார்.
“ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா பாது சேவிதா” என்று வியாசர் பிரம்மாண்ட புராணத்தில் விவரிக்கிறார்.
ஸ்ரீவித்யை என்பது ஆத்ம வித்யை. அதனையே மஹா வித்யா என்கிறார். ‘மஹா’ என்ற சொல் கூட பிரம்மத்தைத்தான் உணர்த்துகிறது. அதுவே ஸ்ரீ வித்யா. அதனால்தான் உபாசனை மூலம் பிரம்ம வித்யையை எவ்வாறு பெறலாம் என்று தெரிவிப்பதற்கு ஆதிசங்கரர் நமக்கு ஸ்ரீ வித்யையை அருளியுள்ளார்.
இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆதிசங்கரர் வைதீகமான ஏதோ ஒரு சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர். ஆதிசங்கரர் மதப் பிரசங்கம் செய்தவர் அல்ல. அவர் தத்துவவாதி. ஏதோ ஒரு மதத்தையோ ஒரு ஆசாரத்தையோ பிரச்சாரம் செய்தவரல்லர். மதங்களுக்கு உயிர் மூச்சான ஆத்ம வித்யையை உபதேசித்தவர். மதம் உயிர் என்றல், தத்துவம் ஆத்மாவைப் போன்றது. ஆதிசங்கரர் ஆத்மாவை விளக்கியவர்.
அதேபோல் தந்திர சாஸ்திரம் வேதத்திற்குப் புறம்பானது அல்ல. நியமம், ஆகமம் இவற்றை நம் பாரதத்தின் இந்து மதம் ஆதாரமாகக் கொண்டுள்ளது.
நியமம் என்றால் வேதங்கள். ஆகமம் என்றால் தந்திர சாஸ்திரம். அதே போல் மந்திர சாஸ்த்திரத்தை ஆதாரமாகக் கொண்ட ஸ்ரீ வித்யையாகிய தந்திரம், பிரம்ம வித்யையாக ஆதிசங்கரருக்கு தரிசனமளித்தது. அதனால்தான் அவர் தன் பீடங்களில் ஸ்ரீ வித்யையை பிரதிஷ்டை செய்தார். இப்பீடங்களை ஆதாரமாகக் கொண்டு, அ வற்றை அனுசரித்து ஏற்படுத்தப்பட்ட உப பீடங்களிலும் ஸ்ரீ சக்ர உபாசனை இப்போதும் நடைபெறுகிறது. எனவே, ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யை இரண்டுமே ஆதி சங்கரர் அருளியவையே.
ஆதிசங்கரருக்கு முன்பு அவை இல்லையா? என்றால், இருந்தன. ஆனால், வாமாச்சாரத்திலும், கௌஸாசாரத்திலும் சிக்கியிருந்தது ஸ்ரீவித்யா தந்திரம். ஆதி சங்கரர், ‘ஸ்ரீவித்யை வாமாசாரமல்ல. சமயாச்சாரம்’ என்றார். “சமயசார தத்பரா” என்பது லலிதா சஹஸ்ர நாமத்தில் காணப்படுகிறது. சமயாச்சாரம் என்பது வைதீகமான, சாத்வீகமான ஆசாரம்.
வைதீக, தந்திர சாஸ்திரமான ஸ்ரீ வித்யையிடம் தத்துவத்தை தரிசித்தார் ஆதிசங்கரர். அதனால்தான் வைதீகமான தந்திர சாஸ்திரங்களையும் அவர் பரிசீலித்து சாத்வீகமான, தத்துவார்த்தமான சம்பிரதாயங்களாக மாற்றினார். சம்பிரதாயங்களில் சாத்வீகமும் சித்தியில் தத்துவ தரிசனமும் இருக்க வேண்டும். நம் வைதீக சம்பிரதாயங்களுக்கு சாத்வீக, தத்துவ மாதுர்யங்களை அளித்தவர் ஆதிசங்கரர்.
சாத்வீகமான பக்தி, தத்துவார்த்தமான ஞானம் இவ்விரண்டையும் சமன்வயப்படுத்தி உபாசனையில் அவர் தரிசனம் செய்தார். ஸ்ரீவித்யையும் ஆத்ம வித்யையும் ஒன்று என்று நிரூபித்தார்.
சௌந்தர்ய லஹரியை நாம் ஆராய்ந்தால் அதில் அத்வைத பரிமள மணம் வீசுகிறது. சௌந்தர்ய லஹரியைப் பற்றி ஒரு கதை கூட உண்டு.
சௌந்தர்ய லஹரியின் மேல் ஆதி சங்கரருக்கு பிரபாவம் ஏற்படுத்தியவர் அவருடைய பரம குருவான ஸ்ரீ கௌட பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரிடமிருந்து ஆதி சங்கரர் நேரடியாக உபதேசம் பெற்றார். ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய பின், பரம குருவான கௌட பகவத்பாதர் அவருக்கு காசீ க்ஷேத்திரத்தில் தரிசனமளித்தார். கௌட பகவத்பாதர் சங்கரரிடம் எவ்விதம் பிரம்ம வித்யையை எடுத்துச் சென்றாரோ அதே விதமாக ஸ்ரீ வித்யையையும் எடுத்துச் சென்றார். பிரம்ம வித்யைக்கும் ஸ்ரீவித்யைக்கும் வேறுபாடு இல்லை. அதோடுகூட அம்பாள் அனுக்கிரகமின்றி பிரம்ம வித்யை கிடைக்காது. அம்பாள் என்றால் பிரம்ம வித்யா ஸ்வரூபிணி. இவ்விஷயம் நமக்கு கேனோபநிஷத் மூலம் சிறப்பாக தெரிய வருகிறது.
கௌட பகவத்பாதர் ஸ்ரீவித்யையோடு தொடர்புடைய ஒரு நூலை எழுதினார். அதன் பெயர், “சுபகோதய ஸ்துதி”. இது ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை விளக்குகிறது. இந்நூல் ‘சிகரிணீ’ ‘ சந்தஸ்ஸில் உள்ளது. சௌந்தர்ய லஹரி கூட சிகரிணீ சந்தஸ்ஸில் தான் எழுதப்பட்டுள்ளது.
பரம குரு எவ்விதம் “சுபகோதய ஸ்துதி”யை எழுதினாரோ அதே சந்தஸ்ஸில் ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியை எழுதியுள்ளார். ‘ஸ்ரீ வித்யை சமயாச்சாரம்’ என்று பிரதிஷ்டை செய்தவர் கௌட பகவத்பாதரே.
சௌந்தர்ய லஹரி எத்தனை சிறப்பான நூல் என்பதை இதற்கு வந்துள்ள உரைகளும் சர்ச்சைகளும் வேறு எந்த நூலுக்கும் இல்லை என்பதிலிருந்து அறியலாம். மாதவ வித்யாரண்யர் எழுதிய சங்கர விஜயத்திற்கு முன்பே எழுதப்பட்ட சங்கர விஜயங்கள் உள்ளன. ஆனந்தகிரி எழுதிய சங்கர விஜயத்திலும் மார்க்கண்டேய சம்ஹிதையிலும் கூட சௌந்தர்ய லஹரியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஆதி சங்கரர் யோக சக்தியால் இமயம் முதல் குமரி வரை பாரதத்தை மும்முறை வலம் வந்ததாகத் தெரிகிறது. அவர் யோக சக்தியால் கைலாசம் சென்றார். சாட்சாத் பரமேஸ்வரன் அவருக்கு ஐந்து சிவலிங்கங்களை பரிசாக அளித்தார். அவை ஸ்படிக லிங்கங்கள். ஆதிசங்கரர் எங்கெங்கே அவற்றை ஸ்தாபித்தாரோ அவை அங்கங்கே தற்போதும் வழிபடப் படுகின்றன.
சிவன் ஐந்து சிவலிங்கங்களை அளித்த போது அம்பாள் கூட ஏதாவது தரவேண்டுமல்லவா? ஏனென்றால், இருவரையும் சேர்த்தே பூஜித்து வருகிறாரல்லவா, ஆதிசங்கரர்? அம்பாள் ஒரு நூலை பரிசாக அளித்தாளாம். அந்த நூலே சௌந்தர்ய லஹரி. அம்பாள் தானாகவே அருளிய நூல் சௌந்தர்யலஹரி.
ஆயின், ஆதிசங்கரர் சிவலிங்கங்களையும் இந்நூலையும் எடுத்து வருகையில், நந்திகேஸ்வரர் தடுத்து நிறுத்தினார். பிரம்ம வித்யையிலும், ஸ்ரீ வித்யையிலும் நந்திகேஸ்வரர் மிகச் சிறந்தவர். ‘நந்தி வித்யா நடேஸ்வரி’ என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். நந்திகேஸ்வரர் உயர்ந்த உபாசகர். அவர் சுத்தமான சாஸ்திரத்தை உலகிற்கு அளித்த குரு ஸ்வரூபம். மேலும் நந்தி, சைவ விஞ்ஞானத்திற்கு குருவுமாவார்.
அப்படிப்பட்ட நந்தி ஆதிசங்கரரைத் தடுத்து, “அம்பாளின் கருணை அபாரமானது. அவள் அளிக்கிறாள். நீயும் அருகதையுள்ளவனே! ஆனால் உலகிற்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் கொடுக்க வேண்டும். உடனே அந்நூலை என்னிடம் தந்து விடு” என்றாராம் நந்தி. ஆதி சங்கரர் அந்நூலை நந்தியிடம் கொடுத்து விட்டார். நந்தி அந்நூலினை இரு பாகங்களாக்கி ஒன்றை மட்டுமே ஆதி சங்கரருக்குத் திரும்பக் கொடுத்தாராம். ஆதி சங்கரர் கேள்விக் குறியோடு அவரைப் பாக்கவே, “அவ்வளவு தான். இந்த பாகம் மட்டுமே உன் மூலம் உலகிற்குச் செல்ல வேண்டும். மற்ற பகுதியை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றாராம்.
ஆதிசங்கரர் மறு பேச்சின்றி வந்து அம்பாளிடம் வினவினாராம். “அம்மா! தாங்கள் எனக்கு பரிபூரணமான நூலை அளிக்கையில் நந்திகேஸ்வரர் எடுத்துக் கொண்டு விட்டாரே” என்று கேட்டாராம். அதற்கு அம்பாள், “அதனை நீ பூர்த்தி செய்வாய்! அதற்காகவே இந்த லீலை நிகழ்ந்தது!’ என்று கூறினாளாம். இக்கதை உண்மையில் நிகழ்ந்ததா இல்லையா என்ற கேள்வியை ஒதுக்கி வைத்தால், இதில் ஒரு விஷயம் நமக்குத் தென்படுகிறது. அது, சௌந்தர்ய லஹரியில் இரண்டு பாகங்கள் உள்ளன என்பது.
இதன் முதல் பாகம் 41 ஸ்லோகங்கள். இரண்டாவது பாகம் 59 ஸ்லோகங்கள். முதல் பாகத்திற்கு ஆனந்த லஹரி என்றும் இரண்டாம் பாகத்திற்கு சௌந்தர்ய லஹரி என்றும் பெயர்கள் என்று சிலர் கூறுவர். சிலர் 41 ஸ்லோகங்களுக்கு மட்டுமே உரை எழுதி உள்ளனர். சிலர் 100 ஸ்லோகங்களும் வியாக்கியானம் எழுதி உள்ளனர். ஆனால் இந்த கதை கூறும் சங்கேதம் என்ன வென்றால், எந்த ஒரு சுலோகத்தையும் அம்மாளின் அருளால் மட்டுமே எழுத இயலும். சங்கரருடைய எழுத்து, வாக்கு, புத்தி அனைத்தும் அம்பாளே அல்லவா? அதனால் அம்பாள் அளித்ததை ஆதி சங்கரர் எழுதினார். முதல் 41 ஸ்லோகங்கள் மந்திர, யந்திர, தந்திர, தத்துவ ரகசியங்களைத் தெரிவிக்கின்றன. மீதி உள்ள 59 ஸ்லோகங்களில் மிகுதியான பாகம் அம்பாளின் சௌந்தர்யத்தை துதிக்கும் வர்ணனை வடிவில் உள்ளது.
சௌந்தர்ய லஹரி வியாக்கியானங்களில் மனோரமா வியாக்கியானம், அப்பய்ய தீக்ஷிதரின் வியாக்கியானம், ஸ்ரீகண்ட தீக்ஷிதர் உரை, சுதா வித்யோதினி, ரங்கதாச வியாக்கியானம் போன்ற பல உள்ளன. ஸௌபாக்ய வர்தினி, அருணா மோதினி, டிண்டிம வியாக்கியானம், லக்ஷ்மீதர வியாக்கியானம் போன்றவையும் கிடைக்கின்றன. இவை சௌந்தர்ய லஹரியின் பல வித உள் அர்த்தங்களை தெரிவிக்கின்றன. இவற்றுள் மிகப் புகழ்பெற்றது லக்ஷ்மீதர வியாக்கியானம். அதே போல் வங்காளத்தில் அச்சுதானந்தரின் வியாக்கியானம் பிரசித்தியாக உள்ளது.
ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தின் பிரமாண கிரந்தமாக சௌந்தர்யலஹரிக்கு உத்தமமான உன்னதமான ஸ்தானம் உள்ளது.
இனி, மேல் நாட்டவர் செய்த வியாக்கியான நூல்கள் கூட உள்ளன. முக்கியமாக 19வது நூற்றாண்டில் ஜான் உட்ராப் என்ற பெரியவர் நம் மந்திர சாஸ்திரத்தைப் பற்றியும் யோக சாஸ்திரம் பற்றியும் அறிவு பூர்வமான முயற்சி மேற்கொண்டார். சௌந்தர்யலஹரியின் 41 ஸ்லோகங்களுக்கு அற்புதமான வியாக்கியானம் எழுதியுள்ளார். முழுமையாக நூறு ஸ்லோகங்களுக்கும் உரை எழுதிய மேல்நாட்டவர்கள் கூட உள்ளனர். நார்மன் பிரௌன் என்பவர் பாரதீய நூல்களை பார்த்து ஆச்சர்யப்பட்டு சௌந்தர்ய லஹரிக்கு சிறப்பாக உரை எழுதி உள்ளார். அது மட்டுமின்றி சார்லஸ் பிலிப் பிரௌன் இதற்கு தெலுங்கில் உரை எழுதியுள்ளார். ஆனால் அது நமக்கு தற்போது கிடைக்கவிலை. அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு சுலோகத்தைப் பற்றியும் ஒவ்வொரு ஆயில் பெயிண்ட் சித்திரங்கள் உள்ளன. அத்தகைய கௌரவம் இதற்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ளது.
சௌந்தர்ய லஹரியைக் கேட்கையில் ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இதனை எழுதுவதற்கு ஆதி சங்கரருக்கு அவருடைய பரம குருவே ஸ்பூர்த்தி அளித்தார்.
சிகரிணீ என்றால் பர்வதம் என்று பொருள். அதே போல் இதன் ஸ்லோகங்கள் கூட மலை மேலே ஏறுவது போலவே இருக்கும். சிகரிணீ விருத்தம் கூட ஆரோஹண வரிசையில் நடப்பது போலவே இருக்கும். உண்மையில் யோக பரிபாஷையில் பர்வதம் என்றால் சுஷும்னா நாடியின் இறுதி பாகம் அல்லது சகஸ்ரார கமலம் என்று பொருள். இன்னொரு உட்பொருள் என்னவென்றால் அம்பாள் பர்வத ராஜ புத்ரி. அம்பாளை பற்றிய ஸ்தோத்திரம் சிகரிணியில் படைக்கப்படுவது சிறப்பு. இந்த சந்தஸ்ஸில் அம்பாள் எப்படி இருப்பாள் என்றால், பிறந்த வீட்டில் பெண் குழந்தை எத்தனை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பாளோ அப்படி இருப்பாளாம்.
ஆதிசங்கரர் நமக்கு சௌந்தர்ய லஹரியின் வழியே அளித்தவை ஸ்ரீவித்யா ரகசியங்கள். இந்த ரகசியங்கள் லலிதா சஹஸ்ர நாமத்திலும் உள்ளன. ஸ்ரீலலிதா மஹா திரிபுர சுந்தரியைப் பற்றிய நாமங்கள் லலிதா சஹஸ்ர நாமங்கள். அந்த அம்பாளின் மஹிமை வைபவங்களைக் கூறும் தோத்திரமே சௌந்தர்யலஹரி. எனவே சௌந்தர்ய லஹரி என்றால் லலிதா மகா திரிபுர சுந்தரியின் தோத்திரமே. இங்கு இன்னுமொரு ரகசியம் என்னவென்றால் இந்த காவியத்தின் நாமமே மதுரமானது.
‘சுந்தரீ வித்யா’ என்றால் ‘திரிபுர சுந்தரி வித்யா’ என்று பொருள். இந்த சுந்தரிக்கு லலிதா என்றும் ராஜ ராஜேஸ்வரி என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. திரிபுர சுந்தரி தேவியோடு தொடர்புடைய தோத்திரம் என்பதால் இது சௌந்தர்ய லஹரி என்றழைக்கப்படுகிறது.
“சர்வ சைதன்ய ரூபம் தாம் ஆத்யாம் வித்யாம் ச தீமஹி
புத்திம் யா ந: ப்ரசோதயாத்…”
‘சர்வ சைதன்ய ரூபிணி அம்பாள்’ என்று தேவீ பாகவதம் கூறுகிறது. சர்வ சைதன்யமே அம்பாள். அதுவே சௌந்தர்யம்.
எனவே சௌந்தர்ய லஹரி என்றால் சைதன்ய லஹரி. ஆனந்தம் எங்குள்ளதோ அங்கே அழகு இருந்தே தீரும். அழகு என்பது ஆனந்தமாகவே இருக்கும். அவையிரண்டும் பிரிக்க முடியாதவை. சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள். எனவே உண்மையான சௌந்தர்யம் எது என்று பரிசீலித்தால் புலன்களில் சைதன்யம் உள்ளவரை அப்புலன்களுக்கு அழகு இருக்கும். புலன்களுக்கு எது சைதன்யம் என்று பார்த்தால் அப்புலன்களை இயக்கம் ‘புத்தி’ என்று காண்கிறோம். புத்தியை இயக்குவது ஆத்ம சைதன்யம்.

புலன்களின் பார்வையிலிருந்து பிராண திருஷ்டி, பிராண திருஷ்டியிலிருந்து புத்தி திருஷ்டி வரை சென்றவருக்கு அதை விட சூட்சுமமான பொருள் இன்னொன்று உண்டென்று தெரிய வரும். இதனையே காயத்ரி மந்திரத்தில் ‘தியோயோன: ப்ரசோதயாத்’ என்று கூறுகிறோம்.
முதலில் இருப்பது சைதன்யம் என்பதால் “ஆத்யாம்” என்றார். அதனை எதன் மூலம் அறியலாம்? சைதன்யத்தை “இருப்பின்” மூலம் அறியலாம். தீபம் உள்ளது என்பதை தீபத்தின் மூலமே அறிய இயலும். அதே போல் உள்ளே சைதன்யம் உள்ளது என்ற விஷயத்தை அந்த சைதன்யம் பரவுவதன் மூலமே அறிய முடியும். சைதன்யத்தின் ‘பரவுதல்’ என்றாலும் ‘பிரவாகம்” என்றாலும் ஒன்றுதான். பிரவாகம் என்றால் வியாபித்தல். அலை அலையாக வியாபிக்கிறது. இந்த அலைகள் பிரவாகத்திலும் பரவுவதிலும் உள்ளன. அதனால் தான் ஒளியும் சப்தமும் அலைகளாக உள்ளன.
இந்த படைப்பில் எதுவானாலும் பரவியது என்றால் அது அலைகளாகவே இருக்கும். இந்த அலைகளால் பிரவாகத்தில் ஓட்டம் ஏற்படுகிறது. தடையின்றி பரவும் இந்த ‘தாரை’ குணத்தை பிரவாகம் என்கிறோம். ஒரு நதி எங்கே பிறந்ததோ அங்கேயிருந்து எதில் கலக்கிறதோ அது வரை நிற்காமல் பிரவகிக்கிறது. அதனால்தான் அதனை பிரவாகம் என்கிறோம். அதே போல் சைதன்யம். விஸ்வத்தில் ஒவ்வோர் அணுவிலும் நிரந்தரம் பிரவகித்துக் கொண்டே உள்ளது. அது தூண் போல் உட்கார்ந்திருக்காது. பரவும் குணமே சைதன்யம். சூரியன், சந்திரன் போன்ற கோளங்களிலும் அனந்த விஸ்வத்திலும் ஒரே சைதன்யம் பரவுகிறது. அந்த சைதன்ய பிரவாகத்திற்கு மற்றொரு பெயர் சௌந்தர்யலஹரி. லஹரி என்றால் பிரவாகம் என்று பொருள். நம் உடலிலும் இந்த சைதன்யம் ஓரிடத்தில் கூட அடைபடாமல் நிரந்தரம் பிரவகித்தபடியே உள்ளது.
“திர்ய கூர்த்தவ மத ஸ்ஸாயி ரஸ்மய: தஸ்ய சந்ததா”. பாதத்திலிருந்து சிரம் வரை அந்த சைதன்யப் பிரவாகம் வெளிப்படுகிறது. எது சாஸ்வதமோ, எதற்கு குறை என்பது கிடையாதோ, எது எப்போதும் ஞான மயமோ, அதனையே சௌந்தர்யம் என்பர். சாஸ்வத ஆனந்த லட்சணம் எதற்கு உண்டோ அதுவே அழகு. சௌந்தர்யலஹரி என்றால் சைதன்ய லஹரி. அதுவே அம்பாள்.
எனில், “சுந்தரீ லஹரி” என்று கூறலாமே? எதற்காக சௌந்தர்யலஹரி என்ற பெயர்? ‘சுந்தரீ’ என்பது பெண் பால் சொல். ‘சுந்தர:’ என்பது ஆண் பாலைக் குறிக்கும். ஈஸ்வர சைதன்யம் நிர்குணம் . நம் உண்மையான இலக்கு என்ன? நிர்குண பர பிரம்மம். பரப்பிரம்ம தத்துவம் நாம ரூபங்களோடு சேர்ந்தது அல்ல.
நாம ரூபங்களற்றதே சௌந்தர்யம். சுந்தரீ என்றவுடன் ஒரு பெண் உருவம் தென்படுகிறது. சுந்தர: என்றல் ஆண் உருவம் தென்படுகிறது. ஆனால் ஆண், பெண் ரூபங்களுக்கு அப்பால் எந்த பரம தத்துவம் உள்ளதோ அந்த பரம தத்துவத்தை இப்பெயர் குறிக்கிறது. நிர்குணமான பரப்பிரம்மத்தை குறிக்கவே சௌந்தர்ய லஹரி என்றனர்.
இந்த சௌந்தர்ய லஹரி மூலமே அநேக சக்திகள் உற்பத்தியாகின்றன. சக்தி அலைகளே சௌந்தர்யலஹரியாக வெளிப்படுகிறது. பரபிரம்ம சக்தியின் வெளிப்பாடே சௌந்தர்யலஹரி.
சுஷுணம்னா நாடியில் உள்ள சைதன்ய ரஸப் பிரவாகமே சௌந்தர்யலஹரி. இதுவே ‘சிதேக ரஸா ரூபிணி’ என்றும் ‘பினதந்து தனீயசீ’ என்றும் லலிதா சகஸ்ரத்தில் கூறப்படுகிறது. இது ஒவ்வொரு ஜீவனிலும் பிரவாக ரூபத்திலிருக்கிறது.
மந்திர ரீதியாகப் பொருள் கூற வேண்டுமானால், திரிபுர சுந்தரி வித்யைக்கு பஞ்ச தசீ மந்திரம் முக்கியமானது. இம்மந்திரத்தில் மூன்று பாகங்களுள்ளன. இதனையே திரிகூடங்கள் என்பர். மொத்தம் பதினைந்து அட்சரங்கள் கொண்ட மந்திரம் இது. பதினைந்து அட்சரங்கள் சேர்ந்த மூன்று கூட்டங்கள். ஒரு பாகம் தன் அடுத்த பாகத்துடன் சேர்ந்திருக்கும். நம் உடலில் கூட தலை முதல் கழுத்து வரை, கழுத்து முதல் இடுப்பு வரை, இடுப்பிலிருந்து பாதம் வரை மூன்று பாகங்கள் உள்ளன. அதே போல் மந்திரங்களைக் கூட ஒரு சரீரமாக பாவனை செய்தால் இதில் ஸ்ரீவாக்பவ கூட்டம், காமராஜு கூட்டம் அல்லது மத்ய கூட்டம் மற்றும் சக்தி கூட்டம் என்று மூன்று பாகங்கள் உள்ளன.
“ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா,
கண்டாத: கடி பர்யந்த மத்ய கூடைக ரூபிணி,
சக்தி கூடைக தாபன்ன கட்யதோ பாக தாரிணீ”
என்ற மூன்று பாகங்களும் லலிதா சகஸ்ரநாம மந்திரத்தில் உள்ளன. முதல் பாகத்தில் வரும் கடைசி சொல் ‘லஹ்ரீம்’. அதே போல் இரண்டாவது கூட்டத்தின் கடைசி சொல் ‘லஹ்ரீம்’. மூன்றாம் கூட்டத்தின் கடைசி சொல் ‘லஹ்ரீம்’. மூன்று கூட்டங்களிலும் இறுதி சொல் ‘லஹ்ரீம்’. மந்திரத்தை நேராகக் கூறாமல் மந்திரங்களை ஒன்றில் ஒன்று பத்திரப்படுத்தினால் யார் வேண்டுமானாலும் அதனை உபாசனை செய்ய முடியும். இதனையே ‘நிக்ஷிப்தம்’ என்பர். இதுவே ரகசியம். இந்த திவ்ய மந்திரத்திலுள்ள ‘லஹ்ரீம்’ என்பதில் உள்ள சப்தத்தை ‘லஹரி’யாக எடுத்துக் கொண்டுள்ளார். அதனுடன் (அம்) நாதத்தைச் சேர்த்தால் ‘லஹ்ரீம்’ என்று உருவம் கொள்கிறது.
நம் ஹிந்து மதம் உபாசனை செய்யும் பரப்பிரம்ம தத்துவத்தை ‘சௌந்தர்யஹரி’ என்ற நாமத்தில் பத்திரப்படுத்தியுள்ளார் ஜகத்குரு ஆதிசங்கரர்.
தேவீ பாகவதத்தில் அம்பாளை பற்றி கூறுகையில்,
“பும் ரூபம் வா ஸ்மரேத் தேவி ஸ்த்ரீ ரூபம் வா சிந்த்யயேத்
அதவா நிஷ்கலாம் த்யாயேத் சச்சிதானந்த விக்ரஹம்”
என்று கூறப்படுகிறது. எந்த உருவில் வழிபட்டாலும் அந்த சச்சிதானந்த விக்கிரகத்தையே ஆராதிக்கிறோம். நமக்கு சத்தியம், சிவம், சுந்தரம் என்ற புகழ் பெற்ற வாக்கியம் உள்ளது. எது சத்தியமாக, சிவமாக, ஆனந்தமாக உள்ளதோ அதனையே சுந்தரீ என்கிறார்கள். அந்த மகா சைதன்யத்தை ‘அம்பாள்’ என்று ஆராதனை செய்வது விசேஷம்..
“இஹ கலு சங்கர பகவத் பூஜ்ய பாதா: சமயத்வா தேவின:
சமயாக்யானாம் சந்திரகளாம் ஸ்லோக ப்ரஸ்துத:” – என்று கூறப்படுகிறது.
இந்த நூறு ஸ்லோகங்கங்களில் ‘சமய’ என்ற பெயர் கொண்ட சந்திர கலையை ஆதிசங்கரர் போற்றுகிறார் என்று கூறுவர். சந்திர கலை என்றால், அம்பாளின் ‘கலை’ வடிவம். அம்பாள் ‘கலை’ வடிவாக இந்த ஜெகமெங்கும் ஒளிர்கிறாள். முக்கியமான இந்த கலை ‘ஷோடசி’ என்ற பதினாறாவது கலை. மீதி உள்ள பதினைந்து கலைகள் பிரதமை முதல் பௌர்ணமி வரை நாம் பார்க்கும் சந்திர கலைகள்.
ஜகத்தினை தன் சக்தியால் பலப்படுத்தி, திருப்திபடுத்தும் கலை எதுவோ அதுவே சந்திர கலை. சாதாணர பௌதீக பார்வைக்கு இக்கலை தென்படாது. ஆனால் இந்த கலை இல்லாவிடில் உலகில் கலைகளே இருக்காது. அம்பாள் தனியாக மட்டுமில்லை; சிவனில் கலந்தும் உள்ளாள். சந்திர கலை உள்ளபோது இருவரையும் வணங்குகிறோம். இதனையே சிவானந்த லஹரியில் பிரதான ஸ்லோகத்தில்,
“சிவாக்யாம் சூடாலங்க்ருத சசி களாப்யாம் நிஜ தப: பலாயாம்” என்று போற்றுகிறார்.
சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே ‘சமயாச்சாரம்’ என்பார்கள்.
அந்த ‘சமய’ எனப்படும் சந்திர கலையையே நூறு ஸ்லோகங்களில் ஜகத்குரு ஆதி சங்கரர் போற்றுகிறார். இந்த சந்திர கலையை யோக ரீதியாகப் பார்த்தால் சகஸ்ரார கமலத்தில் உணரப்படும் அமிர்த பிந்து. அந்த அமிர்த பிந்து அனுபவம் எதுவோ அதுவே சிவ சக்தி யோகம். அதனால்தான் லலிதா சஹஸ்ர நாமத்தில் “சிவ சக்த்யைக்ய ரூபிணி லலிதாம்பிகா” என்ற நாமம் சஹஸ்ரார கமலத்தில் உள்ள இருவரின் தத்துவங்களின் பூரண சச்சிதானந்த பர பிரம்ம தத்துவத்தை தியானிக்கும்படிச் செய்கிறது.
தெலுங்கில் எழுதியவர் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்.




