செங்கல்பட்டு அருகே சதுர் ராம தரிசனம்!

சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் பொன்பதர் கூடம் சென்று சதுர்புஜ ராமரை தரிசித்து விட்டு, அதன் பின் பொன்விளைந்தகளத்தூரில் இரு ராமர்களையும் தரிசித்து பின் செங்கல்பட்டு வந்து 8 மணிக்குள்ளாக ஸேவித்து 10 மணிக்குள் சென்னைக்குள் திரும்பி விடலாம்!

சதுர் ராம தர்சனம்!
 
முதலில் பொன்பதர்கூடம் – சதுர்புஜ ராமர். ஸ்ரீ ராமரின் அமர்ந்த கோலம். நான்கு கரங்களுடன் சங்கு சக்ர தாரியாக வரம் தரும் கரம் கொண்டவனாக… உத்ஸவர் மூர்த்தி வெகு அழகு. கைரேகைகளும், விரல் நகமும் பாதம், கணுக்கால் எல்லாம் அவ்வளவு நுணுக்கமாக காட்சி தரும் அழகு! அதைவிட அழகு.. அனுமனின் உத்ஸவ மூலவர் திருமேனிகள். வலக் கரத்தை வாயினில் பொத்தி அடியேன் என்று வளைந்து குனிந்து பணிந்து, விநய ஆஞ்சநேயராக அற்புதக் கோலம்…!
 
அடுத்து, பொன்விளைந்த களத்தூர் – நரஸிம்ம ஸ்வாமி கோயில் அடுத்துள்ள கோதண்ட ராமர் சந்நிதி. சீதா தேவியை மடியில் அமர்த்தி வைத்த கோலத்தில் ராமன்.! லட்சுமணன் கைகூப்பிய வணக்கக் கோலம்.
 
அந்த சந்நிதியை அடுத்துள்ள தர்ப்ப சயன ராமரின் அழகுக் கோலம். சேலம் விஜயராகவாச்சாரியார், தொடர்ந்து அவர் குடும்பம் செய்துள்ள கைங்கர்யம் போற்றப்பட வேண்டியது. உத்ஸவ மூர்த்தியின் அழகு அவ்வளவு அத்புதம். அருகிருந்த கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.
 
அடுத்து, செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம ஸ்வாமி. ஒரே பீடத்தில் ராமனும் சீதையும். அருகே பிராகாரத்தில் அனுமன் சந்நிதி. சனியை அடக்கிய அனுமன் எனும் கோலம். காஞ்சி மகாபெரியவர் காட்டிக் கொடுத்த விக்ரஹ ரூபி.
 
சென்னையில் இருந்து வருபவர்கள், இந்த நான்கு ராமர்களையும் தரிசிக்க அருமையான வாய்ப்பு. மாலை 3 மணிக்கு மேல் கிளம்புங்கள். செங்கல்பட்டு வந்து, திருச்சி செல்லும் சாலையில் சற்று தொலைவு வந்து, நீதிமன்ற வளாகம் கடந்ததும் வரும் இடதுபுற சாலையில் திரும்பி 7 கி.மீ. தொலைவு…. ஒத்திவாக்கம் ரயில்வே நிலைய கேட் கடந்ததும் வரும் வலதுபுறம்… பொன்விளைந்த களத்தூர். இருப்பினும் சரியாக 5-5.30 மணி அளவில் (அப்போதுதான் திருவாராதனம் செய்ய கைங்கர்யபரர் வருவார்) அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் பொன்பதர் கூடம் சென்று சதுர்புஜ ராமரை தரிசித்து விட்டு, அதன் பின் பொன்விளைந்தகளத்தூரில் இரு ராமர்களையும் தரிசித்து பின் செங்கல்பட்டு வந்து 8 மணிக்குள்ளாக ஸேவித்து 10 மணிக்குள் சென்னைக்குள் திரும்பி விடலாம்!