ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை; எவரும் திருட முடியாது: யுஐடிஏஐ

ஒருவரது அனுமதி இல்லாமலோ, அவருக்குத் தெரியாமலோ, அவரது தகவல்களை வங்கிகளோ, மொபைல் போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது.

புதுதில்லி:

‘ஆதார் தகவல்களை எவரும் திருட முடியாது; அவற்றை பாதுகாக்கவும், பயன்படுத்தவும் பல்வேறு கடுமையான நடைமுறைகள் உள்ளன. ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் உள்ளன’ என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவரின் முகம், கருவிழிகள், கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளைப் பெற ஆதார் அடையாளம் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், ‘ஆதார் விபரங்கள் திருடப்படுகின்றன. அவற்றை பராமரிக்கும் முறை பாதுகாப்பானதாக இல்லை. இதனால் தனிநபர் விபரங்கள் யாருக்கும் கிடைக்கும் அபாயம் உள்ளது’ என பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, ஆதார் எண் வழங்கும் பணியை மேற்கொள்ளும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆதார் மூலம் நேரடியாக மானியங்களை அளிப்பதால் ரூ.49 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப் பட்டுள்ளது

* கடந்த ஐந்து ஆண்டுகளில் 400 கோடி ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

* உலகிலேயே மிகப் பெரியது, மிகவும் பாதுகாப்பானவை இந்த ஆதார் பதிவு விவரங்கள். இந்தத் தகவல்கள் திருடப்பட்டதாகவோ, தவறாக பயன்படுத்தப்பட்டதாகவோ கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தப் புகாரும் இல்லை.

* இந்தத் தகவல்களை எவராலும் திருட முடியாது; தவறாகவும் பயன்படுத்த முடியாது.

* ஒரு குறிப்பிட்ட வங்கியின் துணை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தன் ஆதார் விவரங்களை தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்தார். அது குறித்து, ஆதார் தகவல் பாதுகாப்பு முறைக்கு உடனே கிடைத்த தகவலால் அது தடுக்கப்பட்டது. மற்றபடி, ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாக எந்தப் புகாரும் இல்லை

* ஒருவரது ஆதார் எண் மூலமான தனிப்பட்ட தகவல் பெற பாதுகாப்பான வழிமுறைகள் உள்ளன. எனவே ஆதார் விவரங்கள் இணையதளத்தில் கிடைப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.

வங்கி, மொபைல்போன் நிறுவனங்களுக்கு ஆதார் விவரங்கள் எதுவும் நேரடியாகக் கொடுக்கப்படுவதில்லை. ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக, அந்தத் தகவல்களை பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இதற்கும் கட்டுப்பாடுகள் பல உள்ளன.   ஒருவரது அனுமதி இல்லாமலோ, அவருக்குத் தெரியாமலோ, அவரது தகவல்களை வங்கிகளோ, மொபைல் போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது.

* ஒருவரது புகைப்படத்தை வைத்து, ஆதார் விவரங்களை பார்க்க முடியாது. கண்ணின் கருவிழிப் பதிவுக்கு, புகைப்படத்தைப் பயன்படுத்த முடியாது. அதேபோல, கைவிரல் ரேகைப் பதிவை, புகைப்படமாக வைத்து பயன்படுத்த முடியாது

* பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், ஆதார் விவரங்களைப் பயன்படுத்தினாலும், அதன் விவரங்களை திருடவோ, முடக்கவோ முடியாது. ஆதார் விவரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்கப்படுகின்றன.

– என்று அந்த விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.