
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பரதலத்தில் நின்(று) அகல்கின்ற(து) இருள் போய் அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (8)
பொருள்
திவ்விய சரீரங்களை உடைய தேவர்களும், நாரதர் முதலான மகரிஷிகளும், தும்புருவும் உன் ஆலயத்துக்கு எழுந்தருளினர். நீ திருக்கண் நோக்குவதற்காக சங்க, பத்ம நிதியங்கள், தேவலோகப் பசுவாகிய காமதேனு முதலான அனைத்து மங்கலப் பொருட்களையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். எத்திசையிலும் பரவும் ஒளியை உடைய சூரியனும் உதயமானான். ஆகாயத்தில் இருந்து இருள் அகன்றது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்
வம்பு அவிழ் – பரிமள சுகந்தம் பொருந்திய, திவ்விய சரீரம் தாங்கிய
வாயுறை – தரிசனத்தின்போது எடுத்துச் செல்லப்படும் மங்கலப் பொருட்கள், மங்கல வாழ்த்து
மாநிதி – நிதிக்குவியல்
கபிலை – காமதேனு
ஒண் – ஒளிபொருந்திய
படிமக்கலம் – கண்ணாடி
படிமக்கலம் காண்டற்கு – திருக்கண் சாத்துவதற்கு
ஏற்பன ஆயின – உரிய பொருட்கள், ஏற்புடைய பொருட்கள்
தும்புரு – கந்தர்வரான இவர் நாரதரின் சீடர். மிகச் சிறந்த பாடகர். நாரதருக்கு இணையாகப் போற்றப்படும் விஷ்ணு பக்தர்.
அம்பரதலம் – ஆகாசம்
ஆன்மிகம், தத்துவம்
இறைவனை மனித உருவில் பாவித்து அவனுக்கு உபசாரங்கள் செய்வது பாரதத்தின் தொன்மையான மரபு.
வந்தி என்பது அரசனுக்குச் செய்யப்படும் உபசாரம். வைத்தாலிகம் என்பது ஆலயங்களில் பகவானுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவது. இவனோ அரங்கராஜா. எனவே, இவனுக்கு வந்தி உபசாரமும், வைத்தாலிக உபசாரமும் சேர்த்தே அளிக்கிறார் ஆழ்வார். (அதிகாலையில் உபநிஷதங்கள் அரங்கனுக்கு வந்தி, வைத்தாலிக உபசாரங்களைச் செய்வதாக ‘பாதுகா சஹஸ்ர’த்தில் வேதாந்த தேசிகர் பாடியிருப்பதும் நினைவுகூரத் தக்கது.)