
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
விளக்கவுரை : வேதா டி.ஸ்ரீதரன்
ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோ(டு) இசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கிந்நரர் கெருடர்கள்
கந்தரு வருமிவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலிலவர்க்கு நாளோலக்க மருள
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (9)
பொருள்
கின்னரர்கள், யக்ஷர்கள், கருடர்கள், சாரணர்கள் முதலான தேவ கணங்களும், தேவர்களும், அருந்தவ முனிவர்களும், சித்த புருஷர்களும் இரவு முழுவதும் கீதங்களால் உன்னைத் துதித்தனர். அவர்களது பாடல்களும், அவற்றுடன் இசைக்கப்பட்ட குற்றமற்ற மேளம், யாழ், புல்லாங்குழல், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் நாதமும் அனைத்துத் திசைகளையும் வியாபித்தன. பக்தி மேலிட்ட அவர்கள் உன் திருவடிகளைத் தரிசிப்பதற்காகக் காத்து நிற்கின்றனர். நாள் முழுவதும் அவர்களுக்குக் காட்சி கொடுக்கும் விதமாக, அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்
ஏதம் இல் – குற்றமற்ற
தண்ணுமை – சிறிய மேளம்
எக்கம் – ஒரே ஒரு தந்தி உடைய இசைக்கருவி
மத்தளி – மத்தளம்
யாழ் – வீணை
குழல் – புல்லாங்குழல்
முழவம் – முழக்கம், பேரிகை
கெழுமி – நிறைந்து
இவர் – இவர்கள்
மா தவர் – மஹரிஷிகள்
வானவர் – தேவர்கள்
கெந்தருவர் – கந்தர்வர்கள்
கெருடர் – கருடர்கள்
இயக்கர் – யக்ஷர்கள் (பதினெட்டு கணங்களில் ஒரு பிரிவினர்)
திருவடி தொழுவான் – உனது திருவடிகளைத் தரிசிப்பதற்காக
கங்குல் – இரவு
மயங்கினர் – பக்திக் களிப்பில் ஆழ்ந்தனர்
ஓலக்கம் – கொலு மண்டபம், ராஜ தர்பார் (தரிசனம் தருவது)
நாள் ஓலக்கம் – பகலில் கிடைக்கும் தரிசனம்
ஆன்மிகம், தத்துவம்
‘அரங்கனின் பெயரைச் சொல்லிக் கூவி ஆடிப்பாடித் திரியும் கைங்கரியத்தையே வழிபாடாகக் கொண்ட அடியார்களின் திருவடித் துகள்களில் நனையும் பேறு பெற்றவர்களுக்கு கங்கையில் நீராடும் வேட்கையும் ஏற்படுமோ?’ என்ற குலசேகர ஆழ்வாரின் வரிகளும் இங்கு நினைக்கத் தக்கவை.