November 27, 2021, 4:34 am
More

  திருப்புகழ் கதைகள்: பரவைக்கு தூது சென்ற பரமன் (3)

  புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள் இரவினில் தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம். (திருவிளையாடல் புராணம்)

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ்க் கதைகள் 183
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கருவின் உருவாகி – பழநி
  பரவைக்கு தூது சென்ற பரமன் 3

  இந்த நிலையில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது பற்றிய தகவல் அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன்னுடைய மாளிகைக்குள் விட மறுத்தார். சிவனடியார்கள் பலரும் சுந்தரருக்காக சமாதானம் பேசிப் பார்த்தும் பலனில்லை. மனம் நொந்து போன சுந்தரர், நேராக திருவாரூர் ஆலயம் சென்று தியாகேசப் பெருமானை சரணடைந்தார். தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார். அதன்படியே திருவாரூர் ஆலய சிவாச்சாரியார் வேடத்தில் சென்று, பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.

  தூது சென்ற சிவபெருமானுக்காக இரவு நேரத்திலும் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அங்குவந்த ஈசன், “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்” என்றார்.

  அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க நஞ்சு உண்டீர்; மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்’ எனக்கூறி ஈசனின் திருப்பாதங்களில் பணிந்தார்.

  அவரது பக்திக்கு இரங்கிய ஈசன், “சுந்தரா, உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம்” எனக்கூறினார். பின்னர் தன் சுய உருவத்துடனேயே பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்து கொண்டிருந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.

  ஈசன் பரவையாரிடம், “பரவையே, தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உன்னுடைய இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எம்முடைய விருப்பம்” என்றார்.

  sundaramurthi
  sundaramurthi

  “பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் நான் இசையாது இருப்பேனோ? நாங்கள் கூடி வாழ்கிறோம்” என்று கூறினார், பரவை நாச்சியார். அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரரிடம் சென்று, “சுந்தரா, நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக” என்று கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். முன்புபோல் சுந்தரரும் பரவையாரும் மீண்டும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரியலாயினர்.

  இவ்வரலாறு சிவபெருமானது கருணையின் எளிமையையும் அடியாரது பெருமையையும் நன்கு வெளிப்படுத்துகிறது. இதனாலன்றோ பரஞ்சோதியார் சுந்தரமூர்த்தி நாயனாரை அடியிற் கண்டவாறு துதிக்கின்றார்.

  அரவுஅகல் அல்குலார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு
  தருவம்என்று அளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
  பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
  இரவினில் தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்.
  (திருவிளையாடல் புராணம்)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,110FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-