
திருப்புகழ்க் கதைகள் 243
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நெற்றி வெயர்த்துளி – பழநி
திருவிடைக்கழி
ஸ்ரீசுப்ரமண்யர் ஆலயங்களில் தெய்வானை பிராட்டிக்கு மட்டும் தனிச் சந்நிதி உள்ள மற்றொரு ஆலயம் திருவிடைக்கழி ஆலயமாகும். நான் இவ்வூருக்கு அருகில் உள்ள செம்பொனார்கோயில் என்னும் ஊரில் என் பிள்ளைப் பிராயத்தில் எட்டாண்டு காலம் வாழ்ந்தேன். பள்ளிகளுக்கு இடையில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில், ஆறாம் வகுப்பு படிக்கும்போது, நான் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கினேன். அந்தப் போட்டி நடந்த இடம் இந்த திருவிடைக்கழி அருகே இருந்தது. அப்போது மாயவரத்திற்கும் (தற்போதைய மயிலாடுதுறை) தரங்கம்பாடிக்கும் இடையே ஒரு இரயில் பாதை இருந்தது. என் தந்தையார் செம்பொனார்கோயில் இரயில் நிலைய அதிகாரியாக இருந்தார். எனவே அடிக்கடி தில்லையாடி வரை இரயிலில் சென்று இந்த முருகனைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
இத்தலத்தில் முருகப்பெருமான் பாவ விமோசனம் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. இங்கு சேந்தனார் இறைவன் பெயரில் திருவிசைப்பா பாடியருளியிருக்கிறார். ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமை இத்திருக்கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் (தற்போது மயிலாடுதுறை மாவட்டம்) தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது.
திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன் தன் உருவை, தான் கற்ற மாயையால் சுறா மீனாக மாற்றிக் கொண்டான். பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் உள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான். உயிர்களை காக்கும் பொருட்டு கீழச்சமுத்திரம் வந்து, மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை, வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று எம்பெருமான் திருமுருகன் சம்ஹாரம் செய்தார்.

சிவபக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் அந்த பாவம் நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவணபொய்கையில் நீராடி, இத்தலத்தில் இருந்த திருக்குரா மரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக விளங்குகிறது. மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசமான நிகழ்வு
இத்தலம் முற்காலத்தில் ‘மகிழ்வனம்’ என்றும், குராப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் ‘திருக்குராத்துடையார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும்.
இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.
சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். இந்த பாதயாத்திரை வழிபாட்டில் கடலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, பல வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து இங்கிருந்து பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர்.