
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Food habits of Indians are not nutritious.! – இந்தியர்களின் உணவுப் பழக்கங்கள் சத்தானவை அல்ல!” – இது ஒரு அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!
எந்த தேசத்தின் கலாசாரமாவது தெரியவேண்டுமென்றால் அந்த தேசத்தின் நூல்களைத் திறந்து பார்த்தால் போதும்! எழுத்தாளர்களின் சமகாலச் சமுதாயம் அவர்களின் படைப்புகளில் பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட கதை ஒன்று இளங்கலைப் பாடத்திட்டத்தில் இருந்தது. எந்த நோக்கத்தோடு அந்த கதையை பாடத்தில் சேர்த்தார்களோ தெரியவில்லை. அந்த பாடத்தின் பெயர் ‘தி ரோஸ்ட் பிக்’. பச்சை மாமிசம் மட்டுமே தின்னத் தெரிந்த மேல் நாட்டு நாகரிகத்திற்கு சமைத்து உண்ணும் பழக்கத்தை கற்றுக் கொடுத்த கதை அது. ஒரு விபத்து காரணமாக வீடு பற்றி எரிந்த போது அதிலிருந்த பன்றிக் குட்டிகள் எரிந்துபோயின. அவற்றை எதிர்பாராமல் ருசி பார்த்த மனிதர் சுட்டுத் தின்றால் மாமிசம் ருசியாக இருக்கிறது என்று கண்டுபிடித்த விசித்திரமான கதை.
அதுபோன்ற அநாகரிகம் மிகுந்த மேலைநாட்டவர் வர்த்தகர்களாக 1765ல் நம் தேசத்தில் கால் வைத்தார்கள். இங்கிருந்து பலவித உணவுப் பதார்த்தங்கள், சோளம், சிறுதானியங்கள், கோதுமை, அரிசி போன்ற பிரசித்தி பெற்ற நவதானியங்களைப் பார்த்து வியந்து போனார்கள். சைவ உணவை அறியாத அவர்கள் நாம் சத்தான உணவு உண்பதில்லை என்று இரக்கப்பட்டார்கள்.
இங்குள்ள் உணவு தானியங்களின் விதைகளை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். ஓங்கோல் போன்ற நல்ல ஜாதி பசுக்களை ஓட்டிச் சென்றார்கள். அவர்களின் புண்ணியத்தால் நம் தேசிய விதைகள் நாசமாயின. சத்து இல்லாத பல்வேறு தானியங்கள், விதைகள் இல்லாத பழங்கள் பிரசாரத்திற்கு வந்தன. சமையல் விஷயத்தில் மேல்நாட்டாவரின் கட்டளைக்குள் நான் என்றோ சென்று விட்டோம்.
கைகுத்தல் அரிசி அநாகரிகம்… மில்லில் பாலிஷ் செய்த வெள்ளை அரிசி நாகரிகம் என்று மாறிப்போனது.
தானியங்கள், பழங்கள், காய்கறிகளை உண்டு நம் பூர்விகர்கள் திடமான உடலோடு விளங்கி காலையிலிருந்து மாலை வரை பணி புரிந்ததை நாமறிவோம். இந்தியப் படை வீரர்கள் பண்டையகாலம் முதல் வலிமைக்கும் வீரத்திற்கும் அடையாளமாக நின்றார்கள். அகண்ட பாரதத்தின் பல்வேறு இடங்களில் விளங்கும் மாறுபட்ட தட்பவெப்பதிற்கு ஏற்ப உணவுப் பழக்கங்களும் ஆங்காங்கு விளையும் பயிர்களும் மாறக்கூடியவை.

பக்ஷ்யம் – வடை, அப்பம், பழங்கள் போன்று கடித்து சாப்பிடுபவை, போஜ்யம் – அன்னம், புளிசோறு போன்று மென்று தின்பவை, லேஹியம் – தேன், வெல்லப் பாகு போன்று நக்கி சாப்பிடுபவை, சோப்யம் –பாயசம், ரசம், ஜூஸ் போன்று உறிஞ்சி உண்பவை, பானீயம் – நீர், கஷாயம் போன்று குடிப்பவை… என்ற பல வித உணவு வகைகள் நம் புராணங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளதைக் கொண்டு ஆகார நியமங்களில் நாம் எத்தனை முன்னிலையில் இருந்தோம் என்பதை அறியலாம்.
அன்னபூரணியான நம் பாரததேசத்தில் 1765 முதல் 1947 வரை 120 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியில் 31 முறை வறட்சி வந்தது. பிரிடிஷார் படை வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அக்கிரமமாக, மனிதத் தன்மையற்ற முறையில் திரட்டிச் சென்றதால் வந்த செயற்கை வறட்சிகள் அவை. பசியால் துடிதுடித்து கல்கத்தா முதல் மதராஸ் வரை பல நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் உணவுக்காக பட்டபாடு சொல்லில் அடங்காது. வரலாற்றின் இருண்ட நாட்கள் அவை.
1833 மே, ஜூன் மாதங்களில் ஆந்திர மாநிலத்தில் ஏலூரு, பெஜவாடா, ஜக்கையாபேட்ட, மசிலிபட்ணம் முதலான நகரங்களில் எண்பதாயிரம் பேர் கஞ்சித் தண்ணீருக்காக காத்திருந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் செய்ய உதவி மிகக் குறைவே. எனுகுல வீராஸ்வாமி, ஸ்ரீமதி டொக்கா சீதம்மா போன்ற கொடையாளிகள் பலர் பசியால் துடித்த பொதுமக்களை ஆதரித்தார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷ் தேசம் அனைத்து விதத்திலும் திவாலாகியது. உணவுப் பொருளுக்காக பிற நாடுகளை எதிர்பார்த்தது. 1939ன் போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி டன் உணவுப் பொருள்கள், சர்க்கரை , பழங்கள், மாமிசம் போன்றவை இவர்களுக்குத் தேவைப்பட்டது.
வந்தேறிகள் தம் அதிகாரத்தில் இருந்த பல்வேறு நாடுகளையும் கடித்துக் குதறி, உறிஞ்சி, தமக்கு வேண்டிய உணவுப் பொருளைக் கவர்ந்து சென்றனர்.
விடுதலைக்குப் பிறகும் இந்த வறட்சி அரக்கி நம்மை விடாமல் பின்தொடர்ந்தாள். இதற்கு தீர்வாக அமெரிக்கவோடு நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
பிஎல்480 ஆக பெயர்பெற்ற அந்த ஒப்பந்தம், 1954 ஜூலை 10ல் அமலுக்கு வந்தது. (Public Law -480) உணவுப்பொருளை உற்பத்தி செய்வதற்கு ‘உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் எருக்களும் ரசாயனப் பொருட்களும்’ நம் தேசத்திற்குள் நுழைந்தன.
இயற்கை முறையில் செய்த விவசாயத்தால்தான் வறட்சி வந்தது என்று நம்மை நம்ப வைத்தார்கள் வந்தேறிகள். அதே பிரமையில் நாம் எழுபது ஆண்டுகளைக் கழித்து விட்டோம்.
நம் தேசம் வெளிநாட்டு வியாபாரிகளின் கையில் சிக்கியது. ஜன்க் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ் போன்றவற்றின் மூலம் விஷ உணவு உண்கிறோம். உடல் பருமனை இறக்குமதி செய்து கொள்கிறோம். வெகு முயற்சி செய்து தேநீர், காபி, குளிர்பானங்கள் போன்றவற்றை நமக்கு பழக்கப்படுத்தினார்கள்.
பாரதியர்களின் உணவுப் பழக்கங்களை விமர்சனம் செய்தவர்களே இன்று நம் வழிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை உழவுமுறை இன்று பெருகி வருகிறது. பருப்பு சாதமும் தயிர் சாதமும் உடலுக்கு நல்லது என்று வெளிநாட்டு விஞ்ஞானிகள் இன்று நமக்கு பாடம் எடுக்கிறார்கள்!
Source: ருஷிபீடம் மாத இதழ் அக்டோபர் 2018