
திருப்புகழ்க் கதைகள் பகுதி- 260
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-
மூலமந்திரம் – பழநி
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றித்தொண்ணூற்றி ஒன்றாவது திருப்புகழ், ‘மூல மந்திரம்’ எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். இத்திருப்புகழில் “பழநியப்பா, எனக்கு மெய்யடியார் உறவை அருள்” என அருணகிரியார் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
மூல மந்திர மோத லிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோன மிங்கிலை ஞான மிங்கிலை …… மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றோரு பேரு முண்டருள் …… பயிலாத
கோல முங்குண வீன துன்பர்கள்
வார்மை யும்பல வாகி வெந்தெழு
கோர கும்பியி லேவி ழுந்திட …… நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் …… புரிவாயே
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு …… ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு …… முருகோனே
ஆல முண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி …… குமரேசா
ஆர ணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – கூன் பாண்டியனது கொடிய வெப்பு நோயை நீக்கும் பொருட்டு சமணர்கள் தடவிய பீலி வெந்து நீறாகவும், சிறந்த உயிர் வெதும்பவும், அவர்கள் கரத்தில் பிடித்துள்ள, அசோகத் தழைக்கொத்து வெந்து அழியவும், சிவநாமங்களைச் சொல்லாத ஊமைகளைப் போன்ற சமணர்கள் நெஞ்சில் பயத்தை அடையுமாறும், வாதுசெய்து, திருவருள் துணை கொண்டு, தேவாரப் பாடலுடைய திரு ஏடு வைகையாற்றில் விரும்பி நீரை எதிர்த்துச் செல்லவும், பாண்டியன் வெப்பு நோயும் கூனும் நீங்கி உய்யவும், வஞ்சனையால் திருமடத்திற்குத் தீ வைத்த சமணர்கள், உடலைக் கிழிக்கும் வெவ்விய கழுவில் ஏறவும், திருஞானசம்பந்தராகத் திருவவதாரம் புரிந்து வெற்றி கொண்ட முருகப்பெருமானே;
உலகெலாம் உய்யுமாறு ஆலகாலவிடத்தை உண்டருளியவரும், முச்சுடர்களையும் அழகிய கண்களாக உடையவருமாகிய சிவபெருமானுடைய இடப்புறத்தில் எழுந்தருளியிருப்பவரும், என்றும் இளமையானவரும், முடிவாக விளங்குபவரும், முதலும் முடிவுமாக இருப்பவரும், சுகத்தைத் தருபவருமாகிய உமாதேவியாருடைய குழந்தையே; எப்பொருட்குந் தலைவரே; வேதங்களைத் திருவாய் மலர்ந்தருளிய ஞான பண்டிதரே; அழகிய சேவற் கொடியைத் தாங்கிய அழகிற் சிறந்த திருக்கரத்தையுடையவரே; திருவாவினன் குடியென்னும் திருத்தலத்தில் வாழ்வுகொண்டு, ஆன்மகோடிகளுக்கு அருள் புரியும் பெருமிதமுடையவரே;
தேவரீருடைய மூல மந்திரமாகிய ஷடாக்ஷர மந்திரத்தை அன்புடன் இங்கு நான் ஜெபிப்பதில்லை; இரப்பவர்க்கு இல்லை யென்னாது தருமஞ் செய்வதும் இல்லை; அன்புமில்லை; மௌன நிலையை அடைகின்றேனில்லை; மெய்யறிவு பெற்றேன் இல்லை; இந்நற்குணங்களுக்கு எதிர்மாறாக – பெண்களின் மீது மோகமுண்டு; மிகவும் காமவிடாயுண்டு; செய்கின்ற தீமையுண்டு; அதனால் தண்டனையுண்டு; இதனால் பெரியோர் (நமச்சிவாய என்ற சிவவாசகத்தை உச்சரிக்காத) ஊமையென்று இட்ட பேருமுண்டு; அருள் நெறியிற் பழகாத வடிவு, நற்குணமில்லாத தீயவர்களுடைய நட்பு முதலிய பல தீக்குணங்களை உடையவனாகி, தீ மூண்டு எழுகின்ற பயங்கரமான நரகத்தில் விழுகின்ற எண்ணமுடையவனாகி, மீண்டும் மீண்டும் உடம்பெடுத்து பிறவிச்சுழலில் பட்டு உழல்கின்ற அடியேனை, மெய்ஞ்ஞானிகள் பால் இணங்கி நற்கதி பெறுமாறு கூர்த்த அறிவைத் தந்து ஆட்கொள்ளுமாறு அடியேனிடம் அன்பு கொண்டு எழுந்தருளி வந்து திருவருள் புரியவேண்டும் என்பதாகும்.
இத்திருப்புகழில் முருகப் பெருமானின் மூலந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லுவதால் பிறவிப் பயனை அடையலாம். திருமுருகாற்றுப்படையின் காப்புச் செய்யுள் சொல்லியது போல
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
‘முருகா!’ என்று ஓதுவார் முன்.
சரவனபவ என்ற மூலமந்திரம் மட்டுமல்ல முருகா என்ற மந்திரத்தைச் சொன்னால்கூட வாழ்வின் எல்லா துன்பத்திலும் அவர் நம் முன்னே வந்து நம்மை துன்பத்தினின்று மீட்பார்.