
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
Zero contribution by India towards Science & Technology – தொடர்ச்சி…
புராதன இந்தியாவில் உலோகங்களைப் பிரித்தெடுத்த வரலாறு:-
நம் தேசத்தில் பல்வேறு பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புராதன இரும்புப் பொருட்களும் டில்லியில் உள்ள இரும்புத் தூணும் உலகனைத்தையும் விட நாம் எத்தனை முன்னோடியாக உள்ளோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்.
துருப்பிடிக்காத அற்புதமாகத் திகழும் தில்லியில் உள்ள இரும்புத் தூண் ஒரு தொழில்நுட்ப வெற்றியாக பலராலும் புகழப்படுகிறது. இந்த ஸ்தம்பம் முதலில் மதுராவில் உள்ள விஷ்ணு கோவிலில் இருந்தது. இந்த தூண் பொ.ஆ 370-375 காலத்தில் அமைக்கப்பட்டது. பொ.ஆ 1018ல் அந்த கோவில் இடித்து துவம்சம் செய்யப்பட்டபின் அது டில்லிக்கு எடுத்து வரப்பட்டது.
அகழ்வாராய்ச்சியில் எந்தெந்த உலோகங்கள் எப்போது எங்கு கிடைத்தன என்று சற்று பார்ப்போம்…
காலம்- பொ.ஆ.1800-1000- ராகி சாமான்கள், செப்புத் தகடுகள் – இடம்: இந்திய முழுவதும் பல இடங்களில்.
காலம் –பொ.ஆ.1400- மிகப் புராதன இரும்பு பொருட்கள் –ராஜஸ்தானில் உள்ள ஆஹார்.
காலம் –பொ.ஆ. 4ம் நூறாண்டு – ராஜா புருஷோத்தமன் அலெக்சாண்டருக்கு பரிசளித்த எஃகு வாள்- தக்ஷசீலம்.
காலம் –பொ.ஆ.13-18 நூற்றாண்டுகள் – துத்தநாகம் பெருமளவு உற்பத்தி, தொழில்நுட்ப விஞ்ஞானம் இடமாற்றம் – ராஜஸ்தானின் ஜவாரில் இருந்து இங்கிலாந்துக்கு.
பாரத தேச கப்பலோட்டும் மரபு:-
Navigation என்ற சொல்லுக்கு மூலம் ‘நாவகதி’ என்ற சமஸ்கிருத சொல். ‘நாவ’ என்றால் கப்பல். ‘கதி’ என்றால் இயக்கம். நாவகதி என்ற சொல் கடல் வழிப்பயணம் மற்றும் வணிகம் தொடர்புடைய செய்தியைக் குறிக்கிறது. இவற்றைக் குறித்து மொகஞ்சோதாரா, லோத்தல் ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சி மூலம் அறிந்து உலகம் வியப்பில் ஆழ்ந்தது.
‘காலிபங்கன்’ என்ற இடத்தில் ஹரப்பா அகழ்வாய்வில் சில செப்புக் கருவிகள் கிடைத்தன. மொகஞ்சோதாராவில் கிடைத்த ரம்பம் மற்றுமொரு விந்தை. அது தகரம், ஈயம் கலவையாக இருந்தது நவீன அறிவியலாளர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
கிமு 3000 க்கு முன்னரே சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு வெண்கலம் பற்றித் தெரியும். கோதாவரியின் உபநதி ‘ப்ரவர’ நதி தீரத்தில் கிடைத்த இரு வெண்கல விக்ரகங்கள் கிமு 2000-1800 (ஹரப்பன்) ஆண்டுகளுக்குத் தொடர்புடையதென்று அறியமுடிந்தது.
ருக், யஜுர் வேதங்களில் கனிமப் பொருட்களை தோண்டி எடுப்பது, அவற்றை சுத்தம் செய்வது, அவற்றைக் கொண்டு கருவிகளும் ஆபரணங்களும் உருவாக்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிஹாசங்களிலும் இந்த உலோகங்கள் குறித்தும் அவற்றைக் கொண்டு தயாரித்த உபகரணங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன.
கிரேக்க மொழியில் மிகப் பெரிய என் 10,000 (myriad). இதற்கு மாறாக வேதங்களில் 10^12 என்பது (மகாபத்மம்) பற்றிய குறிப்பு இருக்கிறது. 10^17 (பரார்த்தம்) வரை எண்ணிக்கை புராதன பாரததேசம் அறிந்திருந்தது.
Prof. GB. Halstead in American mathematical monthly கூறுகிறார், “கிமு 20௦௦0ம் ஆண்டு பிங்கள சந்தஸ் சூத்திரங்களில் பூஜ்யம் பற்றி தெளிவாக உள்ளது”.
அனந்த்தம் (Infinity):-
எல்லையற்றதான அனந்தத்திற்குத் தொடபுடைய கருத்துகள் வேதங்களில் விரிவாக உள்ளன. இதற்கு உதாரணமே சாந்தி மந்திரம்.
பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணமுதச்யதே !
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே !!
பொருள்:- இந்தப் பிரபஞ்சம் அனந்த்தம் (எல்லையற்றது). யாரிடமிருந்து இது தோன்றியதோ, அந்த பரமாத்மா கூட அனந்த்தனே. அனந்த்தத்தில் இருந்து அனந்த்தத்ததை எடுத்துவிட்டால் மீதி இருப்பது அனந்த்தமே!
பைதாகரஸ் கிமு500 காலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன்பே இந்த சூத்திரங்கள் கிமு800 லேயே பாரத தேசத்தில் கண்டறியப்பட்டன. பாரத தேச வேத அறிஞர்கள் விஞ்ஞானத்தை தம் சொந்த சொத்தாக என்றுமே நினைக்கவில்லை. தம் பரிசோதனைகளுக்கான விடைகளின் பின்னால் தம் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை.
மேம்படுத்தப்பட்ட இயந்திர விஞ்ஞானம் (மெகானிகல்) கூறுவது போல் ஐந்து வித ‘இயக்கங்கள்’ பதார்த்தங்களுக்கு உண்டு என்று புராதன பாரத தேசம் ‘தர்க்க சங்க்ரகம்’ என்ற நூலின் முதல் அத்தியாயத்தில் கூறுகிறது. அது இவ்வாறு தொடங்குகிறது…
“உத் க்ஷேபணா பக்ஷேபணா குஞ்சின ப்ரசாரண கமனானி பஞ்ச கர்மாணி !!”
பொருள்:- மேலே எம்புவது, கீழே விழுவது, சுருங்குவது, விரிவடைவது, நகர்வது – என்ற ஐந்து குணங்கள் பொருள்களுக்கு உண்டு.
கிமு மூண்டாம் நூற்றாண்டில் கொடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் தங்கத்தை எடை போடும் அளவுகளும், வெள்ளி, மணிகள், மாணிக்கங்களை எடைபோடும் அளவுகளும் வேறு வேறாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
ஆச்சர்யம்:-
*சிருங்கேரியில் துவாதச ராசி ஸ்தம்பத்தில் சூரியன் எந்த ராசியில் இருந்தால் அந்த ராசி ஸ்தம்பத்தின் மீது வெயில் விழும்.
*அரசவெல்லியில் உள்ள சூரியனார் கோவில் முகமண்டபப் படிகளின் கட்டுமானத்தில் உள்ள விந்தை என்னவென்றால் ரத சப்தமியன்று சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் சூரிய தேவனின் பாதங்களின் மேல் விழும்.
*கோனார்க் சூரியர் கோவில் மண்டபம் மட்டுமே தென்படும். கர்பாலயம் அதைவிட ஒன்றரை மடங்கு உயரமானது. இந்த கோவில் கட்டுமானத்தில் இரும்புத் தூண்களைப் பயன்படுத்தினர். புவியீர்ப்பின் காந்தசக்தியை ஆதாரமாகக் கொண்டு சூரிய விக்ரகம் ஸ்தாபித்ததாக தெரிகிறது. இப்படிப்பட்ட பலப்பல விந்தைகள் அன்றைய நம் தேசத்து கட்டடங்களில் காணப்படுகின்றன.
ராஜராஜ சோழன தஞ்சாவூரில் கட்டிய ப்ருஹதீஸ்வரர் ஆலயம் வாஸ்து சாஸ்திர விஞ்ஞானத்தின் சிறப்புகளில் ஒன்று. வானளாவிய பெரிய கோபுரம் 216 அடி உயரம். கோபுரத்தின் உச்சியில் வட்ட வடிவ சிகரமான கலசம் 81 டன் எடை கொண்டது. இந்த கலசத்தை அத்தனை உயரத்திற்கு எவ்வாறு எடுத்துச் சென்றார்கள்? எத்தகைய தொழில் நுட்பம் அப்போது இருந்தது? எந்த சயின்ஸ் அறிவும் இல்லாமலே இவை எல்லாம் சாத்தியமா?
கணித சாஸ்திரம்:-
“எண்களை எப்படி கணக்கிடுவது என்று உலகிற்கு கற்றுத் தந்த பாரத தேசத்திற்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். கணிதம் இல்லாவிட்டால் எந்த விஞ்ஞான ஆய்வும் நடந்திருக்காது” என்றார் நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஐன்ஸ்டின்.
கணித சாஸ்திரத்தில் பண்டைய பராத தேசம் செய்த மிகச் சிறந்த முயற்சிகளை அனைத்துலகும் அங்கீகரித்து போற்றியது. பொஆமு 3000 த்திலிருந்து பொஆ 1200 வரை பாரத தேசம் வெளியிட்ட கணித விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மிகப்பல.
1881ல் பெஷாவர் அருகில் ஒரு கிராமத்தில் கிடைத்த ‘பிக்ஷாலி’ ஓலைச்சுடிகளில் கிடைத்த கணித விஞ்ஞான நூல், 3ம் நூற்றாண்டில் பாரத தேச கணித விஞ்ஞானம் இருந்த உயர்ந்த இடத்தை விவரிக்கிறது.
பூஜ்யம் கண்டுபிடிப்பு, தசம புள்ளி, பெரிய பெரிய எண்களோடு அறிமுகம், அல்ஜீப்ரா மாதமேடிக்ஸ் (இயற்கணிதம்-பிரம்ம குப்தனின் முயற்சி), கணக்கிடும் வழிமுறை (அல்கோரிதம் கால்குலேஷன்), முக்கோணவியல் (Trigonometry), வினோத கணிதம் (Fun Maths)… இப்படி எத்தனை எத்தனையோ கணித முறைகளை இந்தியர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்தனர்.
நாம் மறந்து போய்விட்ட ‘வேத கணிதம்’ சில ஆண்டுகள் கழித்து வெளிநாட்டார் கண்டுபிடிப்பாக வெளிவரும் ஆபத்து இல்லாமல் இல்லை.
பாரத தேசத்தின் எண் கணித முறை:-
எண்களைப் பெயரிட்டுக் குறிப்பிடும் ஆர்வமூட்டும் முறைகள் பல உள்ளன. அவற்றில் ‘பாரத தேசத்தின் எண் கணித முறை’ ஒன்று.
ஆகாயம் =0, சந்திரன் =1, நயனம்=2, அக்னி=3, வேதம்=4, பூதம்=5, சாஸ்திரம்=6, ரிஷி=7, மாதங்கம்=8, கிரகம்=9, அவதாரம்=10.
ரகசியமாக எதாவது செய்தி அனுப்புவதற்கு எண்களை பயன்படுத்தும் அறிவியல் பாரத தேசத்தின் கண்டுபிடிப்பு. ‘கடபயாதி’ என்ற முறை சம்ஸ்கிருத மொழியில் உள்ள மெய்யெழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கணிதம். இதற்கு ‘வரசுசி’ (4ம் நூற்றாண்டு) முன்னோடியாக உள்ளார். இந்த கணிதங்களை நவீன கணித அறிவியல் அறிஞர்கள் படித்து பயிற்சி செய்தால்தான், பாரத தேச கணித விஞ்ஞானத்தின் சிறப்பு அவர்களுக்குப் புலப்படும்.
“வடிவமைப்பு கணிதத்திற்கும் (Geometry), இயற்கணிதத்திற்கும் (அல்ஜீப்ரா மாதமேடிக்ஸ்) முன்னோடிகள் பாரத தேசத்தைச் சேர்ந்த முனிவர்களே!” என்றார் W.Snell (1619).
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பிரம்மகுப்தர் சுழற்சி நாற்கரங்களின் (Cyclic Quadrilaterals) மதிப்பை அறிவதற்கு நிச்சயமான சூத்திரங்களை கண்டறிந்தார். Boyer என்ற விஞ்ஞானி இதனை அங்கீகரித்து பல நூல்களை எழுதினார்.
π (22/7) மதிப்பைக் கண்டறிந்தவர் இந்தியரே!
ஆரியபட்டர் (பொ.ஆ 476) பிரபல கணித, வானியல் விஞ்ஞானி. ‘ஆரியபட்டீயம்’ என்ற நூலை 499ம் ஆண்டில் படைத்தார். “பூமி கோளவடிவத்தில் உள்ளது. தன்னைச் சுற்றி தான் சுழலுகிறது. அதனால்தான் இரவு பகல் ஏற்படுகிறது” என்று விளக்கி பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார். கிரானங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை தன் நூலில் விஸ்தாரமாக எழுதியுள்ளார்.
சாமானியனுக்கும் புரியும்படி ராகு கேது கதையைக் கூறியபோதும், கிரகணங்களின் பின் உள்ள விஞ்ஞானம் நம் முனிவர்களுக்குத் தெரியாததல்ல.
இனி மருத்துவ விஞ்ஞானத்தின் விஷயத்திற்கு வந்தால் ஆயுர்வேதம் அதர்வண வேதத்திற்கு உபவேதமாக செழித்து வளர்ந்துள்ளது.
‘த்ரிதோஷ சித்தாந்தம்’ ஆயுர்வேத மருத்துவ முறைக்கு ஆதாரமானது. நாடி பரீட்சை மூலம் நோயைக் கண்டறியும் சாமர்த்தியம் ஆயர்வேத சாஸ்திரத்தில் உள்ள சிறப்பு. தர்சனம், ஸ்பர்சனம், பிரஸ்னம் என்ற மூன்று முறைகள் மூலம் நோயைக் கண்டறிந்து குணமாக்கும் விஞ்ஞான முறை இது.
புலன்களின் குறைகளை சரிசெய்யும் (பிளாஸ்டிக் சர்ஜரி) அறுவை சிகிச்சைக்கு பாரத தேச வைத்தியர்கள் முன்னோடிகள் என்பதை உலகம் அங்கீகரித்தது. ஆயுர்வேதத்தின் நன்மைகளை விவரித்து ‘சரக முனிவர்’ இவ்வாறு கூறுகிறார்…
“ஆயுர்வேத பிரயோஜனந்து ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்த்ய ரக்ஷணம்
ஆதுரஸ்ய விகார ப்ரசமனம்”
பொருள்:- ஆரோக்கியமாக உள்ளவனின் ஆரோக்கியத்தை காப்பதும், நோயாளியின் நோயை குணமாக்கி அவன் ஆரோக்கியத்தைக் காப்பதும் ஆயுர்வேதத்தின் பயன்கள்.
வந்தேறிகள் நம் மூளையில் விதைத்த சில பொய்களையும் அவற்றின் விளைவுகளையும் அசலான உண்மைகளையும் (A-Z) ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தோம். அதில் இது இறுதிப் பகுதி.
(இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது)
Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2020