spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: இரும்பை அறுக்கும் அறம் போல், இளைஞர் உள்ளம் அறுக்கும் மகளிர் மையல்!

திருப்புகழ் கதைகள்: இரும்பை அறுக்கும் அறம் போல், இளைஞர் உள்ளம் அறுக்கும் மகளிர் மையல்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 268
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இராவின் இருள் – சுவாமி மலை

அடுத்து அருணகிரியார், பெண்கள் மொழி இசைபோன்ற இனிமையுடையது எங்கிறார். இரும்பு அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மையல் அராவி அழித்துவிடும். அதாவது இரும்பு போன்ற உறுதியான உள்ளமும் அழியும் என்பது குறிப்பு.

மேலும் இத்திருப்புகழில் அருணகிரியார், இருபோதும் பராவி என்ற சொற்களின் மூலம் காலையும் மாலையும் கடவுளை வணங்கும் ஆன்றோர் மரபினைச் சுட்டிக் காண்லிக்கிறார். இறைவன் தந்த உடம்பாலும் உரையாலும் உள்ளத்தாலும் இறைவனை வணங்குவதும் வாழ்த்துவதும் சிந்திப்பதும் கடமையாகும். இதனைக் காலைக் கடன், மாலைக் கடன் என்பர். காலைக் கடன் என்பதை இப்போது மலசலம் கழிப்பது என்ற பொருளில் பேசுகின்றார்கள். என்ன அறியாமை? கடவுளை வழிபடுவது காலைக்கடனாகும். இளைஞர் இதனை மறந்து காலையும் மாலையும் மகளிரைப் புகழ்ந்து மதிகெட்டு மயங்கித் தியங்கித் திரிவர்.

இப்பாடலில் தனக்கு அநாதிமொழி ஞானம் தருவாயே என அருணகிரியார் வேண்டுகிறார். அநாதி என்றால் ஆதியில்லாதது எனப் பொருள். அநாதியென்று மொழிகின்ற மெய்ஞானப் பொருளைத் தருமாறு சுவாமிகள் இப்பாடலில் முருகனிடம் வேண்டுகின்றார். குராவின் நிழல் மேவும் குமாரன் என்ற சொற்களில், திருவிடைக்கழி திருத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இத்திருத்தலம் திருக்கடவூருக்கு அருகில் இருக்கிறது. அருமையான முருகருடைய தலம். அத்தலத்தில் முருகப் பெருமான் திருக்குரா மரத்தின் கீழ் நின்று அடியவர்க்கு அருள் புரிகின்றார். கொந்துவார் குரவு அடியினும், அடியவர் சிந்தை வாரிச நடுவினும், நெறிபல கொண்ட வேத நன் முடிவிலும், உறைதரு குருநாதா என்றும் குரவம் உற்றபொன் திருவிடைக்கழிப் பெருமாளே வேறு இரண்டு திருப்புகழ் பாடல்களில் பாடுகிறார். சேந்தனார் அருளிய திருவிடக்கழி திருவிசைப்பாவின் ஒரு பாடலில்

மால்உலா மனம் தந்து என்கையில் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை,
மோல்உலாந் தேவர் குலமுழுது ஆளுங்
குமரவேள், வள்ளிதன் மணாளன்,
சேல்உலாங் கழனித் திருவிடைக்கழியில்
திருக்குரா நீறழ்கீழ் நின்ற
வேல்உலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும் என் மெல்லியல் இவளே.

இத்திருப்புகழில் குணாலம் என்ற சொல்லை அருணகிரியார் பயன்படுத்துகிறார். குணாலை என்றால் வீராவேசத்தால் கொக்கரிப்பது என்று பொருள். சூரபத்மன் தன்னுடைய வீரத்தால் குணாலமிடுகிறான் என அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

இத்திருப்புகழில் துரால் என்ற சொல் பயின்று வருகிறது. துரால் என்றால் துரும்பு. நெருப்பில் துரும்பு எரிந்தொழிவது போல், ஞானிகள் தவாக்கினியால் வினைகளை எரித்துத் துகளாக்குவர் என்பதே இங்கு சொல்லப்படுகிறது. இதனைத் திருஞானசம்பந்தர்

பவ்வம் ஆர்கடல் இலங்கையர் கோன்தனைப்
பருவரைக் கீழ்ஊன்றி
எவ்வம் தீரஅன்று இமையவர்க்கு அருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வம் தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கவ்வை யால் தொழும் அடியவர் மேல்வினை
கனல்இடைச் செதிள்அன்றே.

இந்தத் தேவாரப் பாடலின் பொருள் — கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து, இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர். அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம். அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும் – என்பதாகும்.

நம் பாவங்கள் திருமாலை வழிபட்டால் நெருப்பில் இட்ட தூசு போல அழியும் என ஆண்டாள் நாச்சியார்,

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்… எனப் பாடுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe