
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் – கலைமகள்
வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். வைகாசி விசாகத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்தார்.
மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் இருந்து அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அட்சயப் பாத்திரத்தைக் கொடுத்து, “மக்களின் பசிப்பிணியைப் போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்” என்று கூறி மறைந்தது!
மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள் என்கிறது மணிமேகலை (ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று)
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.
சோழ மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்துவதோடு நாடகத்தில் நடித்தவர்களுக்கும் சன்மானமாக நெல் வழங்கிய ராஜேந்திர சோழன் பற்றிய குறிப்பு தஞ்சை பெரிய கோவில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளதைப் பார்க்கலாம்.
எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்ம ராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். சூரியன் உதித்த பின்னர் காலை வேளையில் அல்லது சூரியன் மறைவதற்கு முன்பாக மாலை வேளையில் தெற்கு முகமாகப் பார்த்து எமதர்ம ராஜனை வைகாசி விசாக நாளன்று வழிபட்டால் நீண்ட ஆயுள் நோயின்றி வாழ்வு கிடைக்கும் என்பார்கள்.
பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முருகனை வழிபடுவதால் பகை அழியும். விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாதலால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.





