
ஓலைச் சுவடிகளில் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக காக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 20 ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகள் அழிந்து அச்சு ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. ஓலைச் சுவடிகளை எழுதவோ படிக்கவோ ஆளில்லை என்ற நிலைமை வெறும் 70-80 ஆண்டுகளில் வந்துவிட்டது.
அச்சு ஊடகம் வந்த பிறகு ” யார் காப்பார் என்னை என தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் உன்னை” என்று களமிறங்கியவர்கள் உ.வே.சாமிநாதய்யர், திருக்குறள் முனுசாமி கவுண்டர் போன்றோர். அவர்கள் சங்க இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அரிய நூல்களையும் தேடித்தேடி கண்டறிந்து ஓலைச் சுவடியில் இருந்து காகித பிரதிகளாக மாற்றினர். இல்லையேல் ஓலைச் சுவடிகளோடு ஓலைச் சுவடியாக தமிழும் கரையான்களால் அழிக்கப்பட்டிருக்கும்.
இன்று புத்தங்கள் அழியும் நிலையை நோக்கி PDF பைல்களும் டாக்குமெண்ட் பைல்களும் கொண்டு சென்றுவிட்டன. நாம் யாரும் காகித புத்தகங்களை தூக்கிக் கொண்டு சுற்றுவதில்லை மிக எளிதாக PDF பைல்களை தான் படித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் PDF பைல்களையும் காலச்சக்கரம் முழுமையாக அழித்து, அனைத்தையும் AI வடிவில் மட்டுமே நிலைத்திருக்க செய்திருக்கும். இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2020 க்கு பிறகு பிறந்த குழந்தைகள் கல்லூரி நாட்களில் AI யையோ அல்லது அதற்கு அடுத்த அப்டேட் டெக்னாலஜியையோ தான் கட்டாயம் பயன்படுத்துவார்கள் அவர்களின் கையில் எந்த புத்தகமோ எந்த PDF பைல்களோ எந்த doc பைல்களோ இருக்க வாய்ப்பில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமானால் மரபு கவிதையை அழித்து புதுக் கவிதையைப் புகுத்திய பாரதி ” மெல்லத் தமிழில் இனி சாகும்” என்றான். ஆம் உண்மைதான் பாரதி மட்டும் புதுக்கவிதை என்ற ஒன்றை தோற்றுவிக்காமல் போயிருந்தால் இன்று ஒரே ஒருவர் கூட கவிஞர் என்றோ தமிழ் புலவர் என்றோ கூறித் திரிய வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். புதுக் கவிதை எழுதவே எவருக்கும் சிந்தனை இல்லை என்னும் போது மரபு கவிதை எல்லாம் இக்காலத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாது, அதனால் தான் முக்காலமும் உணர்ந்த எங்கள் பாரதி இலக்கிய விதிகளை உடைத்து ஒரிஜினல் rugged boy ஆக மரபை உடைத்து புதுக்கவிதையைப் புகுத்தினான். அன்று அவன் அதை செய்யாமல் போயிருந்தால் தமிழ் பேரழிவைச் சந்தித்திருக்கும்.
தமிழோடு தோன்றிய ஏனைய மொழிகள் எல்லாம் கணினி யுகத்தில் தாக்குப்பிடிக்காமல் காணாமல் போனது போல AI புரட்சி தமிழையும் காணாமல் செய்யும் என்றே தோன்றியது. உண்மையில் யார் காப்பார் என்னை என கன்னித்தமிழ் முதுமை தாங்கிய குடுகுடு கிழவியாய் உயிருக்கு ஊசல் ஆடும் நிலையில், டெக்னாலஜி உலகில் நான் காப்பேன் உன்னை என களமிறங்கி இருக்கிறார் பாஜகவின் மாநில செயலாளர் அ. அஸ்வத்தாமன் .
தொழில்நுட்ப புரட்சி இன்னும் 20 ஆண்டுகளில் உலகை தலைகீழாக மாற்ற போகிறது. 1990 காலத்தையும் 2020 காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி கற்பனை பண்ண முடியாத மாற்றத்தை கண் முன் காண்கிறோமோ அதை விட 100 மடங்கு மாற்றத்தை அடுத்த 20-25 வருடங்களில் காண இருக்கிறோம்.
இந்த மிக மிக இக்கட்டான மிக மிக முக்கியமான இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் ChatGPT, சீனாவின் Deep seek இவற்றிற்கு இணையாக தமிழ் வழியில் ஒரு தனித்து சுயமாக இயங்கக்கூடிய AI பிளாட்பாரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அஸ்வத்தாமன். அவரது இந்த முயற்சி முழு வெற்றிபெறுமேயானால் அமெரிக்காவும், சீனாவும் நம்மை பார்த்து பயம்கொள்ளக் கூடும். இந்தியா எந்த வகையிலும் பிற நாடுகளை விட தாழ்ந்ததில்லை என நிரூபிப்பதோடு தமிழ் மொழி உலகை ஆளும் நாளும் மிக விரைவில் வரக் கூடும்.
தமிழ் என்பது ஏதோ கருத்தை மட்டும் பரிமாறும் சாதாரண ஒலிக்குறியீடோ வெறும் வேலை வாய்ப்பை மட்டும் தரும் மொழியோ அல்ல அது பிரபஞ்ச சக்தியின் மொழி, ஒவ்வொரு உயிரும் பேரின்ப நிலையை அடைய சித்தர்கள் மேம்படுத்திய மொழி. “என்னை நன்றாக படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யவே” என்று கூறிய ஆதி சித்தன் திருமூலரும், தமிழே உருவமாய் மாறி யுகம் யுகமாய் காத்து நிற்கும் அகத்தியரும், அந்த சித்தர் கூட்டத்தின் தலைவன் முருகனும் அஸ்வத்தாமனுக்கு துணை நின்று வழி நடத்த வாழ்த்துக்கள்.
- பாலாஜி





