ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத்வரவரமுநயே நம:
*ப்ரதமாசார்யரும் பெரியஜீயரும்*
திருமகள்சேர்மார்பனான திருவரங்கனே ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையின் முதல் ஆசார்யனாவான். அவனுடைய லீலாவிபூதியான இவ்வுலகம் “இருள்தருமாஞாலம்” என்று ஞானிகளால் வழங்கப்படுகிறது. இந்தவுலகில் இருள் என்பது அஜ்ஞானத்தைக் குறிக்கும். நம்முடைய அந்த அஜ்ஞானமெனும் அக இருள் நீக்க, எம்பெருமான் திருவனந்தாழ்வானான ஆதிசேஷனை ஸ்வாமி ராமாநுஜராக அவதரிக்கும்படி நியமித்து, அந்த நியமநாநுகுணமாக ஆதிசேஷன் திருவவதரித்து, ஸம்ஸ்க்ருதவேத பாஹ்ய குத்ருஷ்டிகளான வேதத்தை ப்ரமாணமாகக் கொள்ளாதோர், வேதத்துக்குத் தப்பான பொருளுரைப்போர் ஆகியோரைத் தாமருளிய திவ்யக்ரந்தங்களாலே நிரஸித்து, ஆழ்வார் அருளிச்செயல்களைப் பலருக்கும் எடுத்துரைத்து, திவ்யதேசங்களையும் தம் திருவாணையால் திருத்தியருளி, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரையும் வாழ்வித்து, தம் அவதாரக்ருத்யத்தை ஒருவாறு பூர்த்தி செய்துகொண்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
சிறிதுகாலம் கடந்தபிறகு, முன்பு ராமாநுஜரால் கண்டிக்கப்பட்ட ஸம்ஸ்க்ருதவேத பாஹ்யகுத்ருஷ்டிகள் த்ராவிடவேத பாஹ்யகுத்ருஷ்டிகளாய் மீண்டும் பிறக்க, எம்பெருமானுடைய திருவாணையினால் மீண்டும் ஆதிசேஷனே *மணவாளமாமுனிகளாக* திருவவதாரம் செய்து, முன் அவதாரத்தில் செய்த உபகாரங்களைக் காட்டிலும் பன்மடங்கு உபகாரம் செய்து, இவ்வுலகை வாழ்வித்தார்.
எம்பெருமான் தானே உலகை உய்விக்கப் பண்ணிய அவதாரங்களைக் காட்டிலும், இவ்வாசார்யருடைய திருவவதாரமே மிகச்சிறந்தது. ஆகையினாலே இவ்வாசார்யரை ப்ரதமாசார்யனான பெருமானே தன் ஆசார்யனாக வரித்தான்.
பெருமான் ஸ்ரீராமனாகத் திருவவதாரம் செய்தபோது, விஷ்வாமித்ரர்க்கு சிஷ்யனாய் நின்றான். அப்போது “இவர் ஒரு மஹரிஷி” என்றே அவரை நினைத்திருந்தான். பின் அஹல்யா சாபவிமோசனம் செய்தபின், அவளது புத்ரரான சதாநந்தர் வாயிலாக இவருடைய சரிதைகளை அறிந்த ராமன் இப்படி ராஜஸரும் தாமஸருமாய் விளங்கியிருந்த ஒருவரை நாம் ஆசார்யனாகப் பெற்றோமே என்று திருவுள்ளக் குறைவுற்றான்.
ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரம் செய்து, ஸாந்தீபநியிடம் வித்யாப்யாஸம் செய்த பெருமான், அவர்க்கு குருதக்ஷிணை ஸமர்ப்பிக்க வேண்டிய சமயத்தில், அவருடைய விருப்பத்தைக் கேட்க, அவர் இவனுடைய வைபவங்களை அறிந்திருந்தும், மேலான மோக்ஷத்தைக் கேட்காமல் _ஓதுவாய்மையும் உவனியப்பிறப்பும் உனக்குமுன் தந்த அந்தணனொருவன் காதலென்மகன் புகலிடங்காணேன் கண்டு நீ தருவாய் எனக்கென்று கோதில் வாய்மையினான் உனைவேண்டிய குறைமுடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்_ என்று மங்கைமன்னன் அருளிச்செய்தபடி, என்றோ ஒருநாள் கடலில் மாண்டுபோன தன்பிள்ளையைக் கேட்க, இப்படி லௌகிக பலனை அடையவிரும்பும் ஒருவரை ஆசார்யனாகப் பெற்றோமே என்று பெருமான் வருந்தினான்.
இப்படி விபவாவதாரத்தைப் பெருங்குறையோடு தலைக்கட்டிய பெருமான் அர்ச்சாவதாரத்திலாவது குறைதீர ஒரு ஸதாசார்யரை அடைந்து வாழ்வோம் என்று கருதி, அழகியமணவாளனான திருக்கோலத்தில் ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து மகிழ்ந்தான்.
இவர் வாயிலாகத் திருவாய்மொழிப்பொருளைக் கேட்கத் திருவுள்ளம் பற்றிய அழகியமணவாளன், ஒரு பவித்ரோத்ஸவத் திருநாளில் மணவாளமாமுனிகளை அழைத்து, “நாளை முதலாக நம் பெரியதிருமண்டபத்திலே பெரியவண்குருகூர்நம்பியான சடகோபனுடைய திருவாய்மொழிப்பொருளை ஈடுமுப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்” என்று நியமிக்க, மாமுனிகளும் “இப்படி அருளுவதே!” என்றுகந்து, மறுநாள் தொடங்கி, திருவாய்மொழிப் பொருளை *ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, ஈடுமுப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி* ஆகிய ஐந்து வ்யாக்யானங்களுடன் சேர்த்து காலக்ஷேபம் சாதிக்கத் தொடங்கினார். அழகியமணவாளன் இவர் வாயிலாக காலக்ஷேபம் கேட்பதற்காக *ஒருவருஷகாலம் அனைத்து உத்ஸவங்களையும் நிறுத்தியருளி* திருவாய்மொழிப்பொருளைத் திருச்செவிசாத்தியருளினான். இவ்வாறு மணவாளமாமுனிகள் சாதித்துவந்த பகவத்விஷய காலக்ஷேபம் *ஆனித் திருமூல நன்னாளில்* நிறைவுற்றது.
அன்று அழகியமணவாளன் காலக்ஷேப சாற்றுமுறையின் போது *ரங்கநாயகம்* என்கிற திருநாமத்தோடு கூடிய சிறு பிள்ளையின் வடிவுகொண்டு, சிஷ்யகுழாத்தினுள் புகுந்து, மாமுனிகள் திருமுன்பே நின்று கைகூப்பி,
*ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்|*
*யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்||*
என்கிற தனியனை விண்ணப்பம் செய்து ஓடிச்சென்று மறைய, சிஷ்யர்கள் அனைவரும் இதைக் கண்டு மகிழ்ந்து, இந்த ஸ்ரீசைலேசத் தனியனைப் பட்டோலை கொண்டனர். அழகியமணவாளனும், சேனைமுதல்வர் மூலமாக திருமலை முதலான அனைத்து திவ்யதேசங்களிலும் தன் கைங்கர்யங்கள் யாவும் இந்தத் தனியனின் அநுஸந்தானத்தை முற்கொண்டே தொடங்கப்படவேணும் என்று ஆணையிட்டருளினான்.
இப்படி நம்பெருமாளாலே மணவாளமாமுனிகளுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட இந்த ஸ்ரீசைலேசத் தனியன் திருவவதாரம் செய்த தினம் இன்று! தன் ஆசார்யனுக்கு ஈட்டுக்கு ஈடாக, நாடுபுகழும் பரிசாக அளிக்கப்பட்ட இந்த ஸ்ரீசைலேச மந்த்ரத்தின் பெருமை அளவிடற்கரியது.
இத்தகு ஏற்றம் மிகுந்த தனியனை நாம் அனைவரும் அநுஸந்தித்து, மணவாளமாமுனிகளுடையவும், அவருடைய ப்ரியசிஷ்யனான அழகியமணவாளனுடையவுமான அநுக்ரஹத்தைப் பெற்று உய்வோம்!
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!
ஆசார்யன் திருவடிகளே சரணம்!



