அரங்கனின் அரையர்களும் அத்யயன உற்சவமும்: 1000 ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியம்!

 

அரையர்களின் பாடல்களும்,அபிநயங்களும் தாளங்களும்,தம்பிரான்படி வியாக்கியானங்களும் அரையர் ஸ்வாமிகளால், அரங்கனுக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் விரிவுரைகள். அரையர்கள் நாதமுனிகளின் வழித் தோன்றல்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பகல்பத்து, இராப்பத்து என இருபது நாட்களும் ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்
பிரபந்தப் பாடல்கள்,அரங்கன் ஆலயத்தில் தேவகானமாய் ஒலிக்கும். பக்திரசம் சொட்டும் அந்தப் பாடல்களின் குரல்களுக்கு சொந்தக்காரர்கள் அரையர்கள்.நாலாயிர திவ்ய பிரபந்தங்களை, மரபாகப் பயின்று வருபவர்கள்தான் அரையர்கள்.

வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட,அரையர் ஸ்வாமிகளைக் கோயிலில் இருந்து,அரங்கனின் கைங்கர்யபரர்கள் வந்து அழைத்துச் செல்வார்கள்.

இதுதான் மரபு. இந்த அரையர்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும், குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவார்கள்.
அரையர் ஸ்வாமிகளின் கைகளில் இருக்கும் இரண்டு தாளங்களில் ,ஒன்று நம்மாழ்வார் என்றும் ,மற்றொன்று நாதமுனிகள் என்றும் அழைக்கப்படுகிறது. .

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம். வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவார்கள். இயல், இசை,
நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் செய்வார்கள்..அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடிப்பார்கள். இதைத்தவிர அரங்கனின்அனைத்து உற்சவ காலங்களிலும் அரங்கன்முன்பு,நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவார்கள்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக இந்த அரையர் ஸ்வாமிகளின் திருவம்சத்தில் மட்டுமே இருக்கிறது. இதை அரையர்ஸ்வாமிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்துகொண்டு அரங்கனுக்கு கைங்கர்யம்செய்கிறார்கள். வேறு யாருக்கும் கற்றுக்கொடுப்பது இல்லை.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் அரங்கனையும், கோயிலையும் மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.இவ்வளவு பெருமைமிக்க இந்த நாதமுனிகளின் திருவம்சத்தின், வழி வந்த அரையர் ஸ்வாமிகள் இன்று அரங்கன் ஆலயத்தில் “திருநெடுந்தாண்டகம்” பாடல்களைப்பாடி,அபிநயங்கள் மற்றும் வியாக்கியானங்கள் (விரிவுரைகள்) சாதித்து அரங்கனின் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தினை தொடர்ந்து நடத்துவார்கள்…

இன்று மாலை,அரையர்கள் தங்களின் திருமாளிகையில் (வீடுகளில்) இருந்து,குல்லாய் தரித்துக் கொண்டு,பெரிய பெருமாளின் காப்பந்தம்,திருச்சின்னம்,ஆகியவற்றுடன் புறப்பட்டு,கோயிலின் உள்ளே உள்ள,உடையவர் சந்நிதி(ராமானுஜர்),திருவரங்கப் பெருமாள் அரையர் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி சந்நிதி,நம்மாழ்வார் சந்நிதி முதலிய சந்நிதிகளுக்குச்சென்று,சேவித்த பிறகு,சந்தனமண்டபத்தில் உள்ள,கருடன் சந்நிதியின் அருகில் அமர்ந்து இருப்பார்கள்.

பெரிய பெருமாளுக்கு,(நம்பெருமாளுக்கு) வெள்ளைச்சரம்,மாலைகள் சாற்றப்பட்ட பிறகு,தேங்காய்த்துருவல் அமுது(நிவேதனம்)செய்யப்படும்.

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ, 
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர் ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருக்கும்,இரண்டு தாளங்களில்,”நாதமுனி” என்று அழைக்கப்படும் தாளங்கள், அரங்கனின் திருவடியில் சேர்ப்பிக்கப்படும்.

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”

என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள் (இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர். இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை. தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும். இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப்பிணைக்கப்பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது, அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

அரங்கனின் அத்யயன உற்சவத்தின் (பகல்பத்து, இராப்பத்து) முதல் நாள் நாளை வெள்ளி அன்று தொடங்குகிறது.

கட்டுரை: மாலு, ஶ்ரீரங்கம்