ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்

நாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் …(விவரம்)

அரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,”அத்யயனஉற்சவம்” என்று அழைக்கப்படக்கூடிய
பகல்பத்து(பகலில் 10 நாட்களும்)இராப்பத்து
(இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,
வைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த உற்சவங்கள் நடைபெறும் விதத்தையும்,அரங்கன் அடியார்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்கே பதிவிட முயற்சி செய்கிறேன்.

சிலர் அரங்கத்தில் வந்து இருந்து இந்த திருநாட்களை சேவிக்கிறார்கள்.பலருக்கு அந்த பாக்கியம்கிடைப்பது இல்லை.அப்படி வெளியூரில்இருந்தாலும்,அடியார்களின் மனதில்அரங்கன் நினைவுஎன்றும்இருக்கும் என்பது உண்மை.

அரங்கன் அடியார்கள் அனைவரும் அரங்கனையும்,அத்யயன உற்சவத்தினையும் அனுபவிக்கும் பொருட்டே இந்த உற்சவங்களின் நிகழ்வுகளை ,இந்த பதிவில் எழுதுகிறேன்.

திருமங்கையாழ்வார் காலத்திற்கு பிறகு,நாதமுனிகள்
காலம்வரை இராப்பத்து திருநாளாகிய
“திருவாய்மொழித் திருநாள்” மட்டுமே நடைபெற்று வந்தது.

நாதமுனிகள் யோகக்கலை பயின்றவர்.ஆகவே அந்த யோகக்கலையின்மூலம்,நம்மாழ்வாரை யோகதசையில் கண்டு,நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும், அவரிடம்
கேட்டு அதைத் தொகுத்தார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அமைந்து உள்ள, ஏற்றம் போலே,மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த,திவ்ய பிரபந்தங்களுக்கும்,ஏற்றம்அளித்திடும் வகையில்,
நாதமுனிகளின் காலம் தொடங்கி,”பகல்பத்து”திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.நாதமுனிகளின் காலத்திற்கு முன்புவரை,இராப்பத்து திருநாளாகிய
“திருவாய்மொழித் திருநாள்” மட்டுமே நடைபெற்று வந்தது.

இந்த பகல் பத்து உற்சவம்நடைபெறும் பத்து நாட்களும், நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில்,ஆழ்வார்கள் மற்றும்ஆச்சாரியர்கள் புடைசூழ,நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில்,முதலாயிரம் மற்றும் இரண்டமாயிரம் ஆகியவற்றில் அமைந்து உள்ள,947 +1134=2081 பாசுரங்களை,அரையர்கள் இசையுடன் பாடக்கேட்டு மகிழ்வார்.

பகல்பத்து திருநாளின் முதல்திருநாளில் நடைபெறும் நிகழ்வுகள்

பகல்பத்து முதல்திருநாள்….

காலை,பெரியபெருமாளின் (அரங்கனின்) திருமுன்பு, கர்பகிருஹத்தில் (மூலஸ்தானத்தின் முன்பு) திருப்பல்லாண்டு, அரையர்களால்,தாளத்துடன் இசைக்கப்படும்.

நம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ,இந்த உற்சவத்தின் ஒவ்வொருநாளும் சாற்றிக்கொண்டு,சிம்ம கதியில் கருவறையில்(காயத்ரி மண்டபத்தில்) இருந்து புறப்பாடு கண்டருளுவார்.

அவ்வாறு புறப்பாடு கண்டு வெளியில் வரும் சமயம், சந்தனமண்டபத்திற்கு,எழுந்தருளியவாறே,இரண்டடி ஒய்யார நடையிட்டு,தன்னுடைய பரத்வத்தை வெளிபடுத்துகிறார்…

ஸ்ரீரங்கநாதன் தான்,வராஹ மற்றும் வாமன,திரிவிக்கிரம அவதாரங்களை எடுத்தவன் என்பதை இந்தப்புறப்பாடு உணர்த்துகிறது.

மேலைப்படியில் கோயிலின் ஸ்தலத்தார்களுக்கும்,தீர்த்த மரியாதை உரிமை உடையவர்களுக்கும்மரியாதைகள் நடைபெறும்.(இந்த மரியாதைகள் கீழைப் படியின் அருகில் தான் சில காலங்கள் முன்புவரை நடைபெற்றுவந்தது.இந்த மரியாதைகள் மேலைப்படியில் நடைபெறுவது தவறான செயலாகும்.காரணம் சேனைமுதலியாருக்கு மரியாதை செய்த பிறகே,ஸ்தலத்தார்கள் மரியாதை பெற வேண்டும்..ஆனால் அரங்கத்தில் மட்டுமே இந்த அவலங்கள் தொடருகின்றன.)

மேலைப்படியை விட்டு நம்பெருமாள் இறங்கியபிறகு,உத்தமநம்பிக்கும்,தேவஸ்தான அதிகாரிகளுக்கும்,சந்தன உருண்டை சாதிக்கப்படும்.இந்தச்செயல்கள் மூலம்,இவர்கள் அனைவரும்
ஸ்ரீ ரங்கநாதருடைய கைங்கர்யங்களை, சரிவர செய்வதாகப் ப்ரமாணம் (உறுதி) செய்து கொடுக்கிறார்கள்..

(ஆனால் இன்று ஸ்தலத்தார்கள்,தீர்த்த மரியாதை பெறுபவர்கள் தங்களின் கைங்கர்யங்களை செய்வதே இல்லை..ஆனால் மரியாதைமட்டும்பெற்றுக்கொள்கிறார்கள்..அதைப்பற்றி
விவரமாக எழுதுகிறேன்)

இதன்பிறகு,நம்பெருமாள் சேனைமுதலியார் சந்நிதியின்முன்புறம்எழுந்தருளி, சேனை முதலியாருக்கு மரியாதைகள் நடைபெறும்.பிறகு பகல்பத்து (அர்ஜுன)மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள,
கிளிமண்டபத்தில் நம்பெருமாள் படியேற்ற சேவை ஆகும்.

அப்போது அரையர்கள் தாளமிசைப்பர்.இந்தப் படியேற்றம்ஸுஷும்நா நாடியில் குண்டலினி சக்தி ஆறு ஆதாரங்களையும் கடந்து,ஸஹஸ்ரார சக்ரத்தினை
அடைவதைக் குறிக்கிறது.ஆறாவது மற்றும் ஏழாவது படிகளில்,நம்பெருமாள் ஒருபுறம் இருந்து,மற்றொருபுறம்
திரும்பி சேவைசாதிப்பதால்,திருமங்கையாழ்வார் பாசுரமாகிய,
“நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்.காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்” என்பதின் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.

அதன்பிறகு நம்பெருமாள் “சுரதானி” என்னும் துலுக்க நாச்சியார் சந்நிதிக்கு எதிரில்,படியேற்றசேவை சாதித்து,அரையர்கள் கொண்டாட்டம் ஆனபிறகு,பகல்பத்து உற்சவம் நடைபெறும் அர்ஜுனமண்டபத்திற்கு ,நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார். ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.

அதன் பிறகு திருப்பல்லாண்டு பாசுரங்களின் முதல்இரண்டு பாசுரங்களான,”பல்லாண்டுபல்லாண்டு” மற்றும்
“அடியோமோடும்” ஆகிய இரண்டு பாசுரங்களுக்கு,
அரையர்களின் அபிநயங்கள் நடைபெறும்.

அதன் பிறகு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து,பாசுரங்கள் சேவிக்கப்பட்டு,”வெண்ணெய்விழுங்கி” பதிகம் ஈறாக,மொத்தம் அன்றைய தினம்(பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் )224 பாசுரங்கள் அரையர் ஸ்வாமிகளால் அரங்கனின் முன் சேவிக்கப்படும்.

அரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டுமகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.
அர்ஜுன மண்டபத்தில்(பகல்பத்து) ஆழ்வார்
ஆச்சாரியர்களுக்கு மரியாதை.அதன் பிறகு,ஆழ்வார் ஆச்சாரியர்கள் ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,
தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

பிறகு,நம்பெருமாள்(அர்ஜுனமண்டபத்தில்இருந்து) பகல்பத்து மண்டபத்தில் இருந்து,புதிய திருவாபரணங்கள் மற்றும்
கொண்டை சாற்றிக்கொண்டு புறப்பாடு கண்டருளுவார்.

நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,
ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள
“மீனாட்சி மண்டபத்தில்” தீர்த்த கோஷ்டி நடைபெறும்.

சிறிது நேரம்நம்பெருமாள்,”பத்தி உலாத்துதல்” ஆகி,
மேலப்படியில் படியேற்றம் ஆகி,திருவந்திக்காப்பு
(ஒருவித ஆரத்தி) கண்டருளுவார்.

பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள்(காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

இந்த முறைப்படியே,பகல்பத்துதிருநாளின்,பத்துநாட்களும் நிகழ்வுகள் நடைபெறும்.அத்யயன உற்சவத்தில் அரங்கனை,ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் கூடவே அரையர்களின் தாளத்துடன் கூடிய திவ்ய பிரபந்த பாசுரங்கள் அரங்கனை மட்டும்அல்ல அவன் அடியார்களையும் ,அவர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் என்றால்அதுமிகையாகாது.

ரங்கா ரங்கா ரங்கா…..

(பகல் பத்து இரண்டாம் திருநாள் விவரம் நாளை தொடரும்)

 

கட்டுரை: மாலு, ஶ்ரீரங்கம்