ஒரு முறை தன் கணக்கர் சுதன்மன் காட்டிய கணக்கில் சோழமன்னனுக்கு ஐயம் எழுந்தது. கணக்கை சரியாகக் காட்டும்படி உத்தரவிட்டான் மன்னன். சரியாகக் காட்டியும் தன் மீது பழி வந்ததே என வருந்திய சுதன்மன், சிவபிரானை வேண்டினார். பக்தனின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பரமன், சுதன்மன் வடிவத்தில் மன்னனிடம் சென்று அவன் ஐயத்தைப் போக்கினார். இது தெரியாத சுதன்மன் சற்றுநேரம் கடந்து, மீண்டும் மன்னனிடம் செல்லவே, “அதுதான் கணக்கை சரியாகக் காட்டி விட்டீரே மீண்டும் எதற்கு வருகிறீர்?‘ என்றான். சுதன்மனுக்கு இறைவனின் லீலை புரிந்தது. அதனை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தனக்குக் காட்சி தந்த பரமனுக்கு ஓர் ஆலயத்தையும் எடுப்பித்தான். ஐயம் தீர்த்த பெருமானுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்று பெயரிட்டு வணங்கினான். இங்கே பெருமான் சுயம்புவாக எழுந்தருளியதால், தான்தோன்றியீசர் எனப்பட்டார். இந்தப் பெருமானே அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்தாராம். இங்கே அம்பிகை கொந்தார்குழலம்மை, சுகந்தகுந்தளாம்பாள் எனப்படுகிறார். அம்பிகைக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும், நித்திய கல்யாணி அம்மனுக்கும் தனி சந்நிதி உள்ளது. எனவே இங்கே இரு அம்பிகை சந்நிதிகள். சூரியன் இங்கே சிவபெருமானை வழிபட்டு ஒளி பெற்றான். இனன் என்ற பெயருடைய சூரியன் வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்பது இன்னம்பூர் ஆனதாம். ஐந்து நிலை ராஜகோபுரம். கஜப்பிருஷ்ட விமானம். கிழக்கு நோக்கிய சந்நிதி. கோயிலில் கொடிமரம் இல்லை. இங்கே லிங்கப் பெருமான் மீது ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதிகளில் காலையில் சூரிய ஒளி விழும். இதனை சூரியன், பெருமானை பூஜிக்கும் வழிபாடாகக் கருதுகின்றனர். “சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்துடை யான்றனைக் கனிய வூன்றிய காரணம் என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே” – என திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 45வது தலம் இது. சோழர்களால் கட்டப்பட்டது. பிரார்த்தனை: பள்ளியில் சேரும் முன்னர் இங்கே வந்து அர்ச்சனை செய்து குழந்தைகளின் கல்வி சிறக்க வேண்டுகின்றனர். குழந்தைகள் நெல்லில் எழுதவும், ஐந்து வயதுக்கு மேல் உள்ள சிறார்களுக்கு செம்பருத்திப் பூவை தட்டில் பரப்பி எழுதவும் பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறன் இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவு, கூர்மை பெறுமாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை. சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 7-12, மாலை 4-8 தகவலுக்கு:0435-2000157 இருப்பிடம்: கும்பகோணம் -சுவாமிமலை சாலையில் புளியஞ்சேரிக்கு அருகே 2.கி.மீ தொலைவு.
கல்விச் செல்வம் அளிக்கும் அட்சரபுரீஸ்வரர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari