
ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிற 15ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்படும். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
16 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் , கணபதி ஹோமம் , நெய்யபிஷேகம் நடைபெறும் . கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
தரிசனத்திற்கு வருவோர் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
சான்றிதழ் இல்லாத பட்சத்தில் முன்பதிவு செய்திருந்தாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.