சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..

Published:

தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியிலிருந்தும மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும். பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.

அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த  10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்தது. விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். 
தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகளும்,மின்விளக்குகளும்பொருத்தப்பட்டுள்ளதால் சமயபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

நாளை புதன்கிழமை அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். ஏப்21ல் அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

samayapuram42 - 2026
IMG 20220419 WA0083 - 2026
samayapuram31 - 2026
samayapuram1 - 2026
samayapuram1 1 - 2026
samayapuram2 1 - 2026

Related articles

Recent articles

spot_img