
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை
– பாடலும் விளக்கமும்!
விளக்கம் : வேதா டி.ஸ்ரீதரன்
** அன்(று) இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா(ய்) எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். (24)
பொருள்
வாமன அவதாரத்தில் உலகை அளந்த உன் திருவடிகளுக்கு நமஸ்காரம். ராமாவதாரத்தில் சீதையை மீட்பதற்காக இலங்கையை வென்றெடுத்த வலிமை படைத்த உன் தோள்களுக்கு நமஸ்காரம். நீ குழந்தைக் கண்ணனாக இருந்தபோது சக்கர வடிவில் வந்த அரக்கனை மிதித்து அழித்தாயே, அத்தகைய உன் புகழுக்கு நமஸ்காரம். வத்ச, கபித்தாசுரர்களை வதம் செய்யும்போது உன் ஒரு பாதத்தை பூமியில் ஊன்றி மறு பாதத்தை உயர்த்தி நின்று எங்களுக்குத் திருப்பாத தரிசனம் தந்தாயே, அந்தப் பாதத்துக்கு நமஸ்காரம். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து நின்று எங்களைப் பெருமழையில் இருந்து காத்தாயே, அத்தகைய உன் இரக்க குணத்துக்கு நமஸ்காரம். பகைவர்களை வென்று அழிக்கும் உன் கூர்மையான ஆயுதங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் எல்லாக் காலத்திலும் உன் அடியார்கள். உன்னையே துதித்து நிற்பவர்கள். இன்று உன்னை நாடி வந்துள்ளோம். எங்களுக்கு அருள்புரிவாயாக.

அருஞ்சொற்பொருள்
திறல் – திறன், ஆற்றல்
சகடம் – சக்கரம்
குணில் – எறிதடி
கழல் – கால் வளையம்
குன்று – மலை (கோவர்த்தன மலை)
குடையா எடுத்தவன் – குடை போலப் பிடித்து நின்றவன்
வேல் – கூர்மையான ஆயுதம்
சேவகம் – சேவை, கைங்கரியம்
ஏத்தி – புகழ்ந்து
சென்று –
ராமாவதாரமே ராவண சம்ஹாரத்துக்காகத்தான் நிகழ்ந்தது. அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றான். இலங்கைக்குச் சென்றதும், ராவண சம்ஹாரமும் அப்போதுதான் நிகழ்ந்தன. வனவாசத்தின்போது ராமன் கடந்து சென்ற வழி அல்லது பாதை ‘ராம + அயனம்’ = ராமாயனம் (ராமனின் நகர்வு) எனப் போற்றப்படுகிறது. இலக்கண விதியின் படி இது ராமாயணம் என்று உருமாறும்.
அன்றிவ்வுலகம் அளந்தது – வாமன அவதாரத்தின்போது பூமியை ஓரடியால் அளந்தது.
பொன்றச் சகடம் உதைத்தது – கிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது கம்சனால் ஏவப்பட்ட அசுரன் சக்கர வடிவில் வந்தான். குழந்தை பாலுக்காகக் காலை உதைத்துக்கொண்டு அழுவதுபோல, காலால் உதைத்து அவனை வதம் செய்தான் பால கிருஷ்ணன்.
கன்று குணிலா எறிந்தது – கம்சனால் ஏவப்பட்ட இரண்டு அரக்கர்களை சம்ஹாரம் செய்தது. ஒருவன் கன்று (வத்ச) வடிவிலும், இன்னொருவன் கபித்த மர (விளா மரம்) வடிவிலும் வந்தனர். கிருஷ்ணன், கன்றின் பின்னங்கால்களையும் வாலையும் சேர்த்துப் பிடித்துத் தூக்கிச் சுழற்றினான். வத்சாசுரன் மாய்ந்தான். அதே கன்றை, எறிதடி எறிவதுபோல, விளா மரத்தின் மீது வீசினான். விளாங்கனிகள் குலுங்கி வீழ, கபித்தாசுரனும் மாய்ந்தான். எறிதடியை வீசும்போது ஒரு காலைப் பின்னால் நகர்த்தி வைத்திருப்பார்கள். உடலின் எடை முழுவதையும் அந்த ஒரு கால் மட்டுமே தாங்கி நிற்கும். உடல் வில் போல வளைந்திருக்கும். அப்போதுதான் எறிதடியின் வேகம் அதிகரிக்கும். அவ்வாறு ஒரு காலை முன்னாலும் மறு காலைப் பின்னாலும் வைத்தவாறு நின்றிருந்த பாதங்களுக்கு வணக்கம் என்கிறாள் ஆண்டாள்.
குன்று குடையா(ய்) எடுத்தது – கோவர்த்தன மலையைக் குடை போலப் பிடித்து நின்று பெருமழையில் இருந்து கோகுலத்தைக் காத்தது. இதனால் அவனுக்கு கிரிதாரி [மலையை (குடையாக) அணிந்தவன்] என்றும் பெயர் உண்டு. வட பாரதத்தில் இந்த நாமா மிகவும் பிரசித்தம்.
பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்தவர். எனவே, பல்லாண்டு என்று அவனை வாழ்த்துகிறார். ஆண்டாள் கண்ணனை வரம் தரும் நாயகனாகப் பார்க்கிறாள். எனவே, அவனைப் போற்றிப் பாடுகிறாள். இந்தப் பாசுரத்தைப் பெரியாழ்வார் பாடிய பல்லாண்டுக்கு இணையானது என்று பெரியோர் கூறுவதுண்டு.
பெரியோர் இந்தப் பாசுரத்தைப் ‘போற்றிப் பாசுரம்’ என்று அழைப்பர். அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று ஆறு தடவை போற்றுவது நாக்குக்கு அறுசுவை தருவதாக அமைந்துள்ளது என்பது உரையாசிரியர்கள் கூற்று.
மொழி அழகு
திருப்பாவை முப்பது பாடல்களுமே ஆழ்ந்த பொருட்செறிவும் நடையழகும் ஓசை நயமும் மிக்கவை. அத்தனை பாசுரங்களுக்கும் சிகரம் வைத்தது போல அமைந்துள்ளது இந்தப் பாசுரம். இதன் ஓசை சுழல்காற்றைப் போல இருக்கிறது. இதன் ஒவ்வோர் அடியும் சுழன்று சுழன்று மேலெழும் காற்றைப் போல ஒலிக்கிறது. இந்தப் பாசுரத்தை உச்சரிப்புப் பிழையில்லாமல் வாசிப்பதே கடினம். ஆழிமழைக் கண்ணா, நோற்றுச் சுவர்க்கம், கற்றுக் கறவை, ஏற்ற கலங்கள், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே முதலியவையும் ஓரளவு கடினமே. ஆனால், திருப்பாவை முழுவதையுமே அனைவரும் – படித்தவர் முதல் பாமரர் வரை – வீதி உலாக்களில் எந்தவித சிரமமும் இல்லாமல் மிகச்சரியான உச்சரிப்புடன் பாடுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
***
இந்தப் பாடலில் முதல் வரியில் மட்டும் பகவானின் திருவடிகளுக்குப் போற்றி சொல்கிறாள். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் முதல் நான்கு வரிகளுமே திருவடி தரிசனம் பற்றியவை என்பது புரியும். இரண்டாம் அடி, சென்ற திருவடி பற்றிப் பேசுகிறது. மூன்றாம் அடி, உதைத்த திருவடியையும், நாலாம் அடி, நின்ற திருவடியையும் பாடுகின்றன. அடுத்த இரண்டு வரிகளும் அபயஹஸ்தம் குறித்தவை. கடைசி வரியில் இரங்கேலோர் எம்பாவாய் என்று வரத ஹஸ்தத்தையும் போற்றுகிறாள். எனவே, ‘போற்றிப் பாசுரம்’ என்றே அறியப்படும் இந்தப் பாசுரத்தை ‘கர-சரண கீதம்’ (திருக் கரங்கள், திருப் பாதங்கள் பற்றிய பாடல்) என்றும் அழைக்கலாம்.
***
ஏத்திப் பறைகொள்வான் –
ஏத்துதல் என்றால் போற்றுதல், வழுத்துதல், வணங்கி வழிபடுதல். பறைகொள்வான் என்றால் வரம் பெற்றுக்கொள்வோம் என்று பொருள். வழிபாடு என்பது ஜீவன் செய்ய வேண்டியது. அனுக்கிரகம் செய்ய வேண்டியது அவன் பாடு. ஆனால் பரமாத்மாவால், தூய பக்தியுடன் வேண்டுவோருக்கு வரம் தராமல் இருக்க முடியாது. எனவே, வரம் கிடைப்பது என்பது வழிபாட்டின் விளைவு. இதைக் குறிப்பதற்காகவே இந்த இடத்தில் ஏத்திப் பறைகொள்வான் என்கிறாள் ஆண்டாள். பறை கொள்வது என்பது ஏத்துதலின் துணை நிகழ்வு என்பது இந்த வரியில் தொக்கி நிற்கிறது.

அதைவிடப் பெரிய சிறப்பு, இவள் வேண்டும் பறை. ஆம், அதுவும் ஏத்துதல்தான். உன்னை மட்டுமே நினைக்க வேண்டும், உனக்கு மட்டுமே சேவை புரிய வேண்டும் என்பதுதான் இவள் யாசிக்கும் வரம். அதாவது, ஆண்டாளின் நோக்கமாகிய வரமும், அதற்கு அவள் கைக்கொள்ளும் வழிமுறையாகிய ஏத்துதலும் ஒன்றே.
ஆன்மிகம், தத்துவம்
குன்று குடையா எடுத்தாய் என்ற வரி கிரிதாரி கிருஷ்ணனை நினைவுபடுத்துவதைப் போலவே, அந்த கிரிதாரியின் பக்த மீராவையும் நினைவூட்டுகிறது. அவளுக்கு மிகவும் பிடித்த நாமா கிரிதாரி தான்.
வடக்கத்தி ஆண்டாளான மீராவின் ஜாகோ பம்ஸீவாரே லல்னா ஜாகோ என்ற கீர்த்தனையில் தெற்கத்தி மீராவான ஆண்டாளின் திருப்பாவை வரிகள் அப்படியே காணப்படுவது பரவசமூட்டும் செய்தி.
ஜாகோ பம்ஸீவாரே லல்னா ஜாகோ அன்பே தீங்குழல் ஊத
இன்பே எழுந்தருளாயே
கீழ்வானம் வெள்ளென்க கோபியர் தங்கள் குடில்
தாழ்ப்பாள் திறந்தனவே. தாமதியாது எழுந்தருளே
மங்கள கங்கணம் கலகலப்பக் கைபேர்த்து
மங்கையர் தயிர் கடை மதுரப்பண் கேட்டிலையோ
சுரநரும் வந்தே நின் பள்ளிக்கட்டிற் கீழே
வரம் பெறவே வணக்கமுடன் சங்கமித்திருந்தனரே
போற்றி போற்றி என்றாய்க்குலப் பாலர்கள்
சாற்றினர் ஆறாத அன்புக் களிப்புடனே
இறைவ, அன்னம் நிறைய எடுத்து வா
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
மீராவின் எசமானே, கிரிதரனே, பண்பாளா
வாராயோ, தாரகத்தைத் தாராயோ, தயவாளா.