
பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சுபங்கள் வந்து சேரட்டும்!
சனாதன தர்மத்தில் ‘சங்க்ரமண காலம்’ என்பது மிகவும் பவித்திரமான பருவநிலை. அதிலும் ‘மகர சங்க்ரமணம்’ என்பது தெய்வீகமான ஒரு பருவ காலம்.
பயிர்களின் பண்டிகையாக மட்டுமின்றி சூரியனை வழிபட்டு, நற்செயல்களால், நல்ல சங்கல்பங்களால் மனம் உறுதிபெறும் சுபவேளை இது.
ஸ்நானம், தானம், பித்ரு தர்ப்பணம், பூஜை முதலிய அனைத்தும் அதிக அளவில் பலனளிக்கும் புண்ணியகாலம் இது.
சுமார் ஓராண்டாக உலகை அச்சுறுத்தும் நோய்த் தொற்று சில நாடுகளில் குறைந்து வந்தாலும் சில இடங்களில் பயங்கரமாக பெருகி வருகிறது. புதிய மருந்துகள் மட்டுமே இதற்குத் தீர்வு என்று நவீன மருத்துவம் கூறும் சொற்கள் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு எதிர்பார்த்து இருக்கிறது உலகு.
நோயைத் தடுப்பதாகவும் வந்த பின்னரும் நிவாரணம் அளிப்பதாகவும் உள்ள ஔஷதங்களை நிரூபித்து ஆதாரங்களோடு வெற்றிகரமாக அளித்து வரும் ஆயுர்வேதம், ஹோமியோ மருந்துகளை அனைவரும் பயன்படுத்தி நற்பலன்களைப் பெற முடியும். ஆனால் மருத்துவம் என்றால் அலோபதியே என்ற முற்றிய எண்ணமும், வியாபார நோக்கமும் பெருகிவிட்டதால் மருந்து தொழிற்சாலைகளின் லாபத்திற்காக தேசிய வைத்திய முறைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். ‘ஆயுர் மந்த்ராலயம்’ மூலம் ஆயுர்வேத, ஹோமியோ மருத்துவ விவரங்களும் வெற்றிகளும் தெரியவந்தாலும் தகுந்த விதத்தில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படவில்லை.
உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை செய்த (சுஸ்ருதர்) ஆயுர்வேதம் அன்று பயன்படுத்திய கருவிகளையே இன்றைக்கும் நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. முதல் அறுவை சிகிச்சை செய்த ஆயுர்வேதத்தில் இன்றும் திறமையுள்ளவர்கள் உள்ளனர். ஆயுர்வேதம் மூலம் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்தது.

ஆனால் அறுவை சிகிச்சையை முதன்முதலில் செய்த சாஸ்திரத்தின் மீது புழுதி வாரி இறைத்து ஆயுர்வேதம் அறுவை சிகிச்சையில் ஈடுபடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபடும் நவீன மருத்துவர்கள், ஆயுர்வேதம் பிறந்த நம் தேசத்திலேயே அதனை தடுக்கிறார்கள். அகம்பாவத்திற்கும் ஆவேசத்திற்கும் அடையாளமே இந்த போராட்டங்கள். வரலாற்றையே மறந்து விடும் இந்த அறியாமைக் கூட்டம் கண் திறப்பது எப்போது?
எது எப்படி ஆனாலும் கடவுளின் அருள் பாரததேசத்தின் ஆரோக்கியத்தின் மீது ஆசைகளை ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்முடையதான புராதான வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பது நம் கடமை என்பதை உணர்ந்து, அவற்றைக் கற்றறிந்து, அவற்றில் பயிற்சி பெற்று, நம் தேசிய மருத்துவ முறைகளை காப்பாற்ற வேண்டும்.
பாரதிய மருத்துவ முறைகளனைத்தும், சிறிதும் பரிசோதித்துப் பார்க்காத அரைகுறை மேதாவிகளால் கற்பிக்கப்பட்ட பொய் மூட்டைகளால் கண் காணாமல் மறைந்து போகும் அபாயமான நிலையில் உள்ளது.
ஆரோக்கியம் அளிக்கும் சூரிய பகவான் மகர ராசியில் சங்கமிக்கும் பருவகாலம் இது. இன்றிலிருந்து சௌரமான காலண்டர்படி உத்தராயணம் தொடங்குகிறது. சகல தேவதைகளின் ஓர் வடிவான சூரியனின் கிருபையால் நம் முயற்சிகள் பலன் பெறுவதோடு வெற்றிக்கான கதவுகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இறைவனை சரணடைவோம்!
அசுர சக்திகளின் அழிவுக்கும், சகல மங்களங்கள் ஏற்படுவதற்கும், ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும், உத்தமமான ஆதித்யனை ‘அகஸ்திய உபதேச’ த்தோடு சரணடைந்த ஸ்ரீராமனே நமக்கு ஆதரிசம்.
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் போன்ற பாராயணங்களோடும் சூரிய நமஸ்காரம், ஜபம், தியானம் ஆகியவற்றோடும் இந்த சூரிய பருவ காலத்தில் உலக நன்மைக்கு உபாசனை செய்வோம்!
நம் க்ஷேத்திரங்கள் அனைத்தும் பிறர் வசத்தில் அநியாயமாக அழிவுபடாமல் நலமாக இருக்க வேண்டும் என்றும் பரிபூரணமான பாதுகாப்பு நிலைபெற வேண்டும் என்றும் இந்த புண்ணிய வேளையில் குலதெய்வங்களை வேண்டுவோம்!
ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களால் வரவேற்று, இனிப்புகளைப் பகிர்ந்து, நல்ல பரிணாமங்களை விரும்பும் சுபவேளை இது. அந்த விருப்பங்களின் வலிமையால் ஆரோக்கியம் கிடைக்கட்டும்!
பூமியில் பயிர்களின் பசுமையும், வானில் ஆதித்யனின் பிரகாசமும் இயற்கையையும், இயற்கையை மதிப்பவர்களையும் காக்கட்டும்!
வரவிருக்கும் காலம் அனைவருக்கும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யங்களை அருளட்டும்!
நோயற்ற வாழ்க்கையில் மக்கள் நிலைக்கட்டும்!
இறைவனைச் சரணடைவோம்! சுகங்கள் வந்து சேரட்டும்!
சக்தி நிறைந்த நல்ல மாற்றமே சங்கிரமணம். அது சனாதன தர்மத்திற்கும் பாரத தேசத்திற்கும் வசீகரத்தை அளிக்க வேண்டும் என்றும் நம் புராதன மருத்துவத்தின் பயனறியும் தலைமுறை உருவாக வேண்டும் என்றும் அதன் மூலம் ருஷிகளின் விஞ்ஞானம் வேண்டும் மறுவாழ்வு பெற வேண்டும் என்றும் பிரார்த்திப்போம்!
நோயற்ற ஆரோக்கியமான உயிர்களாக வாழ விரும்புவோம்!
நமோ மித்ராய பானவே ம்ருத்யோர்மாம் பாஹி !
ப்ராஜிஷ்ணவே விஸ்வ ஹேதவே நம: !
த்ருதபத்மத்வயம் பானும் தேஜோமண்டல மத்யகம் !
சர்வாதிவ்யாதி சமனம் சாயாஸ்லிஷ்டதனும் பஜே !!
மகரசங்கராந்தி நல்வாழ்த்துக்கள்!
Source: ருஷிபீடம் – ஜனவரி 2021 தலையங்கம்