
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மேற்கிந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகள் இன்று, இம்மாதம் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் அகமதாபாத்தில் நடைபெறும். டி20 போட்டிகள் இம்மாதம் 16, 18. 20 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறும்.
மேற்கிந்திய அணி அண்மைக்காலமாக அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணியும் தெனாப்பிரிக்காவில் மிக மோசமாக விளையாடிவிட்டு திரும்பியிருக்கிறது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் தனது தங்கையின் திருமணம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
எனவே ரோகித் ஷர்மாவுடன் ஷிகர் தவான் ஓப்பனிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவான், ஷ்ரெயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்.

எனவே இந்திய அணியும், மேற்கிந்திய தீவு அணியும் கிட்டத்தட்ட சமமான நிலையில் இருப்பதாக அனைவரும் எண்ணினர். ஆனால் நடந்தது வேறு. இந்தியா டாஸ் வென்று மேற்கிந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இதானால் இரண்டாவதாக இந்தியா பேட் செய்யும்போது மேற்கிந்திய அணிக்கு பனியால் பந்து ஈரமாகும் பிரச்சனை ஏற்பட்டது.
மற்றபடி இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றது. இன்றைய ஆட்டத்தை லேசர் அறுவைசிகிச்சை ஆட்டம் எனச் சொல்லலாம். இந்திய பந்துவீச்சாளர்கள் மிக நன்றாக பந்து வீசினார்கள். ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கட்டுகளையும், சாஹால் அதேபோல ஒரே ஓவரில் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
ரன் ரேட்டை குறைவாகவே வைத்திருந்தார்கள். இதனால் மேற்கிந்திய அணியால் 50 ஓவர் முழுவதுமாக ஆடமுடியவில்லை. அவர்கள் 43.5 ஓவரில் 176 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தார்கள். அடுத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும் (60 ரன், 51 பந்துகளில்) இஷான் கிஷன் (36 பந்துகளில் 28 ரன்) நன்றாக விளையாடினார்கள்.
14ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோகித்தும் ஐந்தாவது பந்தில் கோலியும் அவுட்டானார்கள். 17ஆவது ஓவரில் இஷான் கிஷன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரில் ரிஷப் பந்த் அவுட்டானார். பின்னர் ஆட வந்த சூர்யகுமார் யாதவ்வும் தீபக் ஹூடாவும் நன்றாக ஆடி 28 ஓவரில் 178 ரன் எடுத்து இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
தீபக் ஹூடாவிற்கு இது முதல் ஒருநாள் போட்டி. இந்தியாவிற்கு இது 1000மாவது ஒருநாள் போட்டி. என்னைப் பொருத்த வரையில் அடுத்த போட்டியில் ரிஷப் பந்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் ஒழுங்காக ஆடுவார்.