
பொருள்செயல் வகை
புண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்;
பொருளைரட் சிக்க வேண்டும்
புத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து
போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம்
உடலில்த ரிக்க வேண்டும்;
உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி
ஓங்குபுகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
வழிதேட வேண்டும்; அன்றி,
வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே
மார்க்கம்அறி யாக்குரு டராம்
அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்
அழகன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, கங்கை மரபின் முதல்வனான மோழை யீன்ற அழகனான, எமது தேவனே!, செல்வமானது நல்ல நெறியிலே கிடைத்தல் வேண்டும், (அவ்வாறு கிடைத்த) செல்வத்தைக் காப்பாற்றல் வேண்டும், அறிவின் திறத்தால், அப்பொருளை ஒன்று நூறாகுமாறு புரிந்து நன்றாகப் பெருக்குதல் வேண்டும்; சாப்பிடவேண்டும், பிறகு, அழகிய ஆடைகளையும் அணிகளையும் மெய்யிலே அணிதல் வேண்டும், தம்மையடைந்த
பெரியோர்க்கும் கவிஞருக்கும் உறவினர்க்கும் வறியவர்க்குங் கொடுத்து
மிக்க புகழையீட்டல் வேண்டும், உலகிலே வேறுபல அறங்களையும் இயற்றுதல் வேண்டும், மேலான வீட்டுக்கு நெறியாராய்தல் வேண்டும், இவ்வாறு அல்லாமல், வீணிலே (மண்ணில்)
புதைத்து வைத்துவிட்டுப் (பிறர்க்கு) அளிக்காதவர்களே நெறியறியாத
குருடர்கள் ஆவர்.
கருத்து: நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப் பிறர்க்கும் அளித்தல் வேண்டும்.