
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட், அகமதாபாத், இரண்டாம் நாள், 10.03.2023
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
அகமதாபாத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47).
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 10 ஓவர் விளையாடி விக்கட் இழப்பின்றி 36 ரன் (ரோஹித் 17, கில் 18) எடுத்தது. நேற்றைய ஆட்டநேர முடிவில் உஸ்மான் க்வாஜா 104 ரன்களோடும் கிரீன் 49 ரன்களோடும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இன்று க்வாஜாவும் கீரீனும் மேலும் 40 ஓவர்கள் விளையாடி, ஐந்தாவது விக்கட்டுக்கு 208 ரன் சேர்த்தனர். கிரீன் தனது முதல் சதத்தை அடித்தார். ஒரு ஆஸ்திரேலிய ஜோடி இந்திய மண்ணில் 1979க்குப் பிறகு 200க்கு மேல் ரன் அடித்து சாதனை செய்துள்ளது. க்வாஜா 10 மணி நேரம் விளையாடி, 422 பந்துகளைச் சந்தித்து 180 ரன் எடுத்துள்ளார். ஆட்டக்களம் இன்னமும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறவில்லை.
அஷ்வின் ஆறு விக்கட்டுகள் எடுத்திருப்பது அவரது திறமையால் மட்டுமே. இதன் மூலம் அவர் அதிக 5 விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஒரு இன்னிங்ஸில் 26வது முறையாக 5விக்கெட் வீழ்த்தி சாதனைப் பட்டியலில், இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அளவில் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ரோஹித் ஷர்மாவும் கில்லும் எந்தவிதத் தவறும் செய்யாமல் இந்திய அணியின் 10 ஓவர்களையும் விளையாடினர். இந்திய அணி பேட்டர்கள் நாளையும் நாளை மறுநாளும் முழுவதுமாக விளையாடினால் வெற்றிக்கு ஒரு சிறிய வாய்ப்பிருக்கிறது. அதுவும் ஐந்தாவது நாள் ஆட்டக் களம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறினால்.