
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட், அகமதாபாத், ஐந்தாம் நாள், 13.03.2023
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அகமதாபாத்தில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு ஆல் அவுட் (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47). இரண்டாவது இன்னிங்க்ஸில் 78.1 ஓவர் விளையாடி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன்னிற்கு ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 178.5 ஓவர்கள் விளையாடி 571 ரன்னுக்கு ஆல் அவுட் (கோலி 186, கில் 128, அக்சர் படேல் 79, ஜதேஜா 44, புஜாரா 42, ரோஹித 35, லியன் 3/151, மர்பி 3/113, ஸ்டார்க் 1/97).
தங்கள் அணி தோற்றுப் போனதால் முதல் இரண்டு டெஸ்டுகளின் ஆட்டக்களத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலர் குறை சொன்னார்கள். மூன்றாவது டெஸ்டில், இந்தூர் ஆட்டக்களமும் முதலிரண்டு மைதானங்களின் ஆட்டக்களம் போலத்தான் இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா வென்றதால் பெரிய விமர்சனம் எழவில்லை. அகமதாபாத் ஆட்டக்களம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை. இரண்டு அணிகளும் இன்னும் ஐந்து நாட்களுக்குக் கூட ஆடியிருப்பார்கள். அப்படி ஒரு உயிரற்ற ஆட்டக்களம். இதற்கு விமர்சகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
இன்று காலை முதல் மதியம் 1520 வரை விளையாடி ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தாங்கள் மேலும் ஆட விரும்பவில்லை எனத் தெரிவித்ததால் ஆட்டம் அப்போதே முடித்து வைக்கப்பட்டது. ஆட்டம் ட்ராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன்களாக அஷ்வினும் ஜதேஜாவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்திய அணி இந்தப்போட்டியிலும் வென்றால் உலகக்கோப்பை டெஸ்ட் பொட்டியில் விளையாடத் தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி இதற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. ஆனால் மதியம் இரண்டு மணி போல நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக செய்தி வந்துவிட்டது.
இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குச் செல்வதில் சந்தேகம் அடுத்த நியூசிலாந்து இலங்கை போட்டியின் முடிவு வரை நீடித்திருக்கும். ஆனால் இலங்கை இன்று தோற்றதால் இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்கிறது.
இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 15:30க்குத் தொடங்கும். அதாவது ஐபிஎல் போட்டிகளின் ஃபைனல் முடிவடைந்த பிறகு போட்டி நடக்கும்.