இந்தியா ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி,
மும்பை, 17.03.2023
கே.எல்.ராகுல் அபாரம்… இந்தியா வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டும் ஜதேஜா 2 விக்கெட்டும் குல்தீப், பாண்ட்யா இருவரும் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷன் 3 ரன், விராட் கோலி 4 ரன், சுப்மன் கில் 20 ரன்னில் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார்.
39 ரன்கள் எடுப்பதற்குள் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் வெளியேறிய நிலையில், கே.எல்.ராகுல்- கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களில் ஆட்டமிழந்தையடுத்து கே.எல்.ராகுலுடன், ரவீந்திர ஜதேஜா இணைய, அணி வெற்றியை நோக்கி பயணித்தது. அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் விளாச, 39.5 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.
இப்போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. ஜதேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.