
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 4 – மானங்காத்த கபில்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா ஜிம்பாபே ஒரு நாள் போட்டி ஜூன் 18ஆம் தேதி நடந்தது. இது ஒரு சிறந்த ஒரு நாள் போட்டியாகும். கபில்தேவின் உண்மையான சிறந்த இன்னிங்ஸ் இந்தியாவுக்கு ஒரு அற்புதமான வெற்றியைக் கொடுத்தது.
இந்தப் போட்டி டன்பிரிட்ஜ் வெல்ஸ் என்ற ஒரு சிறிய மைதானத்தில் நடந்தது. ஆனால் அந்த மைதானம் ஒரு பெரிய கூட்டத்தால் நிரம்பியிருந்தது. மைதானத்தின் எல்லைக்கோட்டிற்கு அருகே உள்ள பெரும்பகுதியைச் சுற்றியிருந்த விருந்தோம்பல் கூடாரங்களுக்கு இடையே மக்கள் கூட்டம் நெருக்கியடித்தது.
இதற்கான காணொளி நேரடி ஒளிபரப்பை பிபிசி ஏதோ பிரச்சனை காரணமாக ஒளிபரப்பவில்லை. ஒரு இந்திய இரசிகர் கபில்தேவின் ஆட்டத்தை விடியோ எடுத்திருந்தார். ஆனால் அதனை தருவதற்கு மாபெரும் தொகையைக் கேட்டார்.
அண்மையில் வெளியான ‘1983’ என்ற திரைப்படம் இந்த மேட்சை மிக அழகாகக் காட்டியிருந்தது.
நான் அப்போது பெங்களூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் அறையில் அதிகாரி ஒருவர் அச்சமயத்தில் என்னோடு இருந்தார். அவரிடம் ட்ரான்ஸ்சிஸ்டர் இருந்தது. நாங்கள் கிரிக்கட் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தோம்.
இந்தியா ஒரு கட்டத்தில் 17/5. அப்போது இரவு 10.00 மணி. இனி இந்தியா தோற்றுவிடும் என எண்ணி நாங்கள் இருவரும் உறங்கச் சென்றுவிட்டோம். அடுத்தநாள் காலை செய்தித்தாளில் முதல் பக்கத்தில், முழுப் பக்கத்திலும் கபிலின் படம்; இந்தியா வெற்றி என்ற செய்தி; வேறு தகவல்கள் இல்லை.
நான் ஓடிச் சென்று அந்த அதிகாரியிடம் சொல்கிறேன். அவர் தியானத்தில் இருந்தார்; அவர் எழுந்து ட்ரான்ஸ்சிஸ்டரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று நியூஸ் கேட்க ஆரம்பித்தார். இந்தியா வென்றிருக்கும் என எங்களால் நம்ப முடியவில்லை.
இந்தப் போட்டியில் ஜிம்பாபே தொடர்ந்து ஐந்தாவது முறையாக டாஸ் இழந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஜிம்பாபே அணியின் பீட்டர் ராவ்சன் மற்றும் கெவின் குர்ரான் பேய் பிடித்தது போல் பந்துவீசினார்கள். பந்தை சீமில் இருந்து கூர்மையாக நகர்த்தி, ஆடுகளத்தில் நிறைய லிப்ட் கண்டுபிடித்து இந்திய டாப் ஆர்டரை சின்னாபின்னமாக்கினர்.
கவாஸ்கர் (2 பந்துகள், பூஜ்யம் ரன்), ஸ்ரீகாந்த் (13 பந்துகள், பூஜ்யம் ரன்), மொஹிந்தர் அமர்நாத் (20 பந்துகள், 5 ரன்), சந்தீப் படீல் (10 பந்துகள், 1 ரன்), யஷ்பால் ஷர்மா (28 பந்துகள் 9 ரன்) என ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆகி பெவிலியன் சென்றனர். இந்தச் சமயத்தில் கபில் விளையாட வந்தார்.
இப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் இச்சமயத்தில் கவலையடைந்து, போட்டி இந்தியாவின் படுதோல்வியோடு மதிய உணவு நேரத்திற்குள் முடிந்துவிடுமோ என்று பயந்தனர். அவர்கள் ஜிம்பாபே அணியின் மேலாளர் டேவ் எல்மேன்-பிரவுனிடம் தங்கள் அச்சம் பற்றித் தெரிவித்தனர். அவர் – காத்திருங்கள், நிலைமை மாறலாம் – என்று சொன்னார்.
பிபிசி, ஒரு தடாலடி ஜிம்பாப்வே வெற்றியை எதிர்பார்த்து, அவரிடம் வந்து ஒரு நேர்காணல் செய்ய எண்ணி அவருக்கு போன் செய்தது. அவர்களிடமும், “விளையாட்டு முடிவடையவில்லை” என்று அவர் கூறினார்.
ஏனென்றால் இதற்கு முன்னர் முதல் முறை ஜிம்பாபே அணியும் இந்திய அணியும் விளையாடியபோது 155 ரன்களை இந்திய அணி 37.3 ஓவரில் எடுத்திருந்தது.
ரோஜர் பின்னி கபில்தேவ் உடன் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மேல் விளையாடினார். 48 பந்துகளைச் சந்தித்து 22 ரன் எடுத்தார். அதன் பின்னர் ரவி சாஸ்திரி சரியாக விளையாடவில்லை. அவருக்குப் பிறகு வந்த மதன்லாலும் கிர்மானியும் கபிலுக்கு கம்பனி தந்தனர்.
கபில் ஒரு அபாரமான இன்னிங்ஸை விளையாடினார், 138 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன். டன்பிரிட்ஜ் வெல்ஸில் மைதானம் ஒருவகையில் அவருக்கு சில நன்மைகளைச் செய்தது.
இந்த மைதானத்தின் ஒரு பக்க எல்லைக்கோடு தூரத்திலும் மற்றொரு பக்க எல்லைக் கோடு அருகேயும் இருந்தது. கபில் தேவ் குறுகிய எல்லையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். கபில் 16 ஃபோர், 6 சிக்சர் என 100 ரன்கள் இதிலேயே எடுத்தார்.
ஜிம்பாபே அனியின் தலைவர் செய்த பந்து வீச்சு மாற்றங்களும் இந்த அதிரடி ஆட்டத்திற்கு உதவியது. கபில் 72 பந்துகளில் சதமடித்தார். கபில் தன்னுடைய இன்னிங்க்ஸை முடித்துவிட்டு வரும்போது சுனில் கவாஸ்கர் கபிலுக்கு குடிக்க ஒரு கோப்பை குடிநீருடன் வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவாஸ்கர் கபிலுக்குப் பதிலாக அணித் தலைவராகியிருக்க வேண்டியவர். ஜிம்பாபே அணி பல ஆண்டுகளுக்கு கபிலின் இந்த இன்னிங்க்ஸை மறக்கவில்லை.
ஜிம்பாபே அணி பதிலுக்கு 57 ஓவரில் 235 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது. கபிலின் இந்த வெறித்தனமான ஆட்டம் இந்திய அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது.
அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவுடனான லீக் ஆட்டம், இங்கிலாந்துடனான அரையிறுதி ஆட்டம், மேற்கு இந்தியத் தீவுகளுடனான இறுதி ஆட்டம் என அனைத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.