
ஐ.பி.எல் 2025 – லக்னோ vs சென்னை
லக்னோ – 14.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (166/7, ரிஷப் பந்த் 63, மிட்சல் மார்ஷ் 30, ஆயுஷ் பதோனி 22, அப்துல் சமத் 20, ஜதேஜா 2/24, பதிரணா 2/45, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் தலா ஒரு விக்கட்) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (19.3 ஓவர்களில் 168/5, ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 43, ரச்சின் ரவீந்திரா 37, ஷேக் ரஷீத் 27, எம்.எச். தோனி ஆட்டமிழக்காமல் 26, ரவி பிஷ்னோய் 2/18, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், எய்டன் மர்க்ரம் தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (6 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி பேட்ஸ்மென் நிக்கோலஸ் பூரன் (8 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மிட்சல் மார்ஷ் (25 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ரிஷப் பந்த் (49 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஆயுஷ் பதோனி (17 பந்துகளில் 22 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), அப்துல் சமத் (11 பந்துகளில் 20 ரன், 2 சிக்சர்) ஆகிய நால்வர் மட்டும் சிறப்பாக ஆடினர்.
மற்ற வீரர்களான டேவிட் மில்லர் ரன் எடுக்க வில்லை; ஷர்துல் தாகூர் (4 ரன்) விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 20 ஓவர் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்தது. ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த விதத்திலும் அப்துல் சமதை ரன் அவுட் ஆக்கிய விதத்திலும் தோனி சிறந்து விளங்கினார்.
167 என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாகக் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (19 பந்துகளில் 27 ரன், 6 ஃபோர்) மற்றும் ரச்சின் ரவீந்திரா (22 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர்) இன்று சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அதன் பின்னர் ஆட வந்த ராகுல் திரிபாதி (10 பந்துகளில் 9 ரன்), ரவீந்த்ர ஜதேஜா (11 பந்துகளில் 7 ரன்) இன்று சோபிக்கவில்லை. சென்னை அணி இன்றும் தோல்வியுமோ என்று அனவரும் எண்ணியபோது ஷிவம் துபே (37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் எம்.எஸ். தோனி (11 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் த்மஎடித்தந்தனர்.
விஜய் ஷங்கர் (8 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) இடையில் வந்துபோனார். இதனால் 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை அணியின் அணித்தலைவர் மற்றும் விக்கட் கீப்பரான எம்.எஸ். தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.