
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025
இந்தியா பாகிஸ்தான் ஃபைனல்
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
ஆசிய கோப்பை ஆட்டங்களின் முடிவுகள் எதிர்பார்த்தபடி போகவில்லை. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய ஓமன் அணிகளிக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் சூப்பர் 4 பொட்டிகள் தொடங்கின. இதில் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியின் முதல் அப்சட் இலங்கை வங்கதேச அணிகள் ஆட்டத்தில் நிகழ்ந்தது.
20ஆம் தேதி நடந்த முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேச அணி (19.5 ஓவர்களில் 169/6) இலங்கை அணியைத் (20 ஓவர்களில் 168/7) தோற்கடித்தது. 21ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி (18.5 ஓவர்களில் 174/4) பாகிஸ்தான் அணியை (20 ஓவர்களில் 171/5) தோற்கடித்தது. 23ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இரண்டாவது அப்சட் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அணி (18 ஓவர்களில் 138/5) இலங்கை அணியை (20 ஓவர்களில் 133/8) வென்றது. 24ஆம் தேதி நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி (20 ஓவர்களில் 168/6) வங்கதேச அணியை (19.3 ஓவர்களில் 127) வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
25ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (20 ஓவர்களில் 135/8) வங்கதேச அணியை (20 ஓவர்களில் 124/9) வென்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நேற்று 26ஆம் தேதி நடந்த இந்திய அணி (20 ஓவர்களில் 205/5) இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியில் பதுன் நிசாங்கா 107 ரன் கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை அணி ஆடியது. இந்திய அணி தரப்பில் இருந்து ஆகாஷ்தீப் சிங் பந்துவீசினார். இலங்கை அணி ஒரு ஓவரில் 2 விக்கட் இழந்து 2 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் பந்திலேயே மூன்று ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றிபெற்றது.
இறுதிப்போட்டி இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நாளை (28.09.2025) நடக்கவுள்ளது. இதுவரை நடந்த ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மா 309 ரன் களுடன் மட்டையாளர்களில் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 13 விக்கட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.





