
இந்தியா- தென் ஆப்பிரிக்கா – முதல் டெஸ்ட் – கொல்கொத்தா –
இந்திய அணியின் பரிதாபத் தோல்வி 16.11.2025
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் (159, மர்க்ரம் 31, முல்டர் 24, டோனி டி ஸோரி 24, ரியன் ரிக்கில்டன் 23, பும்ரா 5/27, சிராஜ் 2/47, குல்தீப் 2/36, அக்சர் படேல் 1/21) இரண்டாவது இன்னிங்க்ஸ் (பவுமா ஆட்டமிழக்காமல் 55, காபின் போஷ் 25, ஜதேஜா 4/50, குல்தீப் 2/30, சிராஜ் 2/2, பும்ரா 1/24, அக்சர் 1/36) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (189, கே.எல். ராகுல் 39, வாஷிங்க்டன் சுந்தர் 29, பந்த் 27, ஜதேஜா 27, சைமன் ஹார்மர் 4/30, மார்கோ ஜேன்சன் 3/35, கேசவ் மஹராஜ் 1/66, காபின் போஷ் 1/32) இரண்டாவது இன்னிங்க்ஸ் (93, வாஷிங்க்டன் சுந்தர் 31, அக்சர் படேல் 26, ஜதேஜா 18, சைமன் ஹார்மர் 4/21, கேசவ் மஹராஜ் 2/37, மார்கோ ஜேன்சன் 2/15, மர்க்ரம் 1/5) தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்க நாள் முதலே தெ ஆப்பிரிக்க அணி தடுமாறியது. நேற்று மாலை வரை இந்திய அணி நிச்சயமாக வெல்லும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் 124 ரன்கள் எடுக்க முடியாமல் இந்த முதல் டெஸ்டில் தோற்றுப் போனார்கள். இந்திய அணியின் திறமையான பேட்டர்களான ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்க்ஸிலும் (12 & 0) சரியாக ஆடவில்லை. கே.எல். ராகுல் இரண்டாவது இன்னிங்க்ஸில் 6 பந்து விளையாடி 1 ரன் எடுத்தார். துருவ் ஜுரல் இரண்டு இன்னிங்க்ஸிலும் 13 மற்றும் 14 ரன் எடுத்தார். இந்த நிலையில் இந்திய அணி எப்படி வெற்றிபெற முடியும்?
இந்திய விளையாட்டு தளங்களை சுழல் பந்து சாதகமாக அமைக்கும்போது இந்திய அணி பேட்டர்கள் சுழல் பந்தை திறமையாக ஆடவும் செய்ய வேண்டும். டெஸ்டில் களத்தில் எத்தனை நேரம் ஆட்டமிழக்காமல் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் 136 பந்துகள் ஆடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். இது அவர்களது அணியின் வெற்றிக்கு அடிகோலியது. இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் மட்டுமே 92 பந்துகள் ஆடினார். அணி வெற்றி பெறா வேண்டிய நிலையில் மிக மோசமாக ஆடிக்கொண்டிருந்தபோது ரிஷப் பந்த், ஜதேஜா போன்றவர்கள் நிலைத்து ஆடாமல் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது.
அடுத்த டெஸ்டில் தங்களது தவறுகளை இந்திய அணி திருத்திக்கொள்ளுமா எனப் பார்க்கலாம்.





