
தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா போட்டியில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஸ்மித், வார்னருக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சூதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
ஜோகன்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பயிற்சியாளர் டாரன் லேமேனுக்கு தொடர்பில்லை என்றும், அதனால் அவர் பதவியை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். இந்தப் பிரச்னையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரன் பாங்க்ராப்ட் மூவரும் போட்டியில் இருந்து விலக்கப்படுவதாகவும், அவர்களுக்கான தண்டனை 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் சூதர்லேண்ட் கூறினார்.
விலக்கப்பட்ட மூவருக்குப் பதிலாக மேத்யூ ரென்ஷா, ஜோ பர்ன்ஸ், கிளென் மாக்ஸ்வெல் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிவித்த அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



