
இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க 1000வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்திய அணியுடன் பர்மிங்காமில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து களமிறங்கும் 1000வது டெஸ்ட் போட்டியாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1877 மார்ச்சில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் மோதிய அந்த அணி இதுவரை விளையாடி உள்ள 999 டெஸ்டில், 357ல் வெற்றி பெற்றுள்ளது. 297 டெஸ்டில் தோல்வி கண்டுள்ள அந்த அணி, 345 போட்டியை டிரா செய்துள்ளது. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 1902ல் இருந்து இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இங்கிலாந்து 27 வெற்றி, 8 தோல்வி, 15 டிரா கண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க 1000வது டெஸ்டில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1000வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட் குடும்பத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாதனை மைல்கல்லை எட்டும் முதல் அணி என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. கிரிக்கெட் விளையாட்டின் மணிமகுடமாக விளங்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதுடன் உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்குவதையும் தொடர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சரித்திர நிகழ்வை கவுரவிக்கும் வகையில், நியூசிலாந்து அணி முன்னாள் கேப்டனும் சிறப்பு போட்டி நடுவர்கள் குழுவின் உறுப்பினருமான ஜெப் குரோ, ஐசிசி சார்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் கோலின் கிரேவ்சுக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெள்ளிக் கோப்பையை நினைவுப் பரிசாக அளிக்க உள்ளார். l 1932 ஜூனில் இருந்து இதுவரை இந்திய அணியுடன்117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இங்கிலாந்து 43 வெற்றி, 25 தோல்வி, 49 டிரா கண்டுள்ளது. l சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் இங்கிலாந்து 30 வெற்றியும், இந்தியா 6 வெற்றியும் பெற்றுள்ளன. 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. l எட்ஜ்பாஸ்டனில் இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளதில், இங்கிலாந்து 5-0 என முன்னிலை வகிக்கிறது.



