புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் போட்டிகள் அக்.5ம் தேதி முதல்முறையாக சென்னையில் தொடங்குகிறது. இறுதிப் போட்டியும் ஜனவரி 5ம்தேதி சென்னையில் நடைபெறும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலில் 8 அணிகளுடன் நடந்த இத்தொடரில் தற்போது 12 அணிகள் களமிறங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தமிழ் தலைவாஸ் அணி முதல்முறையாக இடம் பெற்றது. அதனால் புரோ கபடி போட்டிகளின் ஒரு பகுதி சென்னையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியும் சென்னையில் நடந்தது. மற்ற ஊர்களில் நடந்த போட்டிகளை விட சென்னையில் நடந்த போட்டிகளுக்கு அதிக அளவில் ரசிகர்கள் வந்திருந்தனர்.
கபடி தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டு என்பதால் இங்கு இயல்பாகவே அமோக வரவேற்பு இருந்தது. அதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள 6வது சீசன் தொடரின் பைனல் மட்டுமின்றி, தொடக்க போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது. அதன்படி தொடக்க விழா அக்.5ம் தேதியும், இறுதிப் போட்டி ஜன. 5ம்தேதியும் சென்னையில் நடைபெறும். மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. தொடர்ந்து 13 வாரங்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளை சுமார் 31 கோடி பேர் ரசிப்பார்கள் என்று புரோ கபடி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



