பெல்ஜியம் கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில், ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு சீசனில் 11வது கிராண்ட்பிரி கார்பந்தயம், பெல்ஜியம் நாட்டின் ஸ்டேவ்லெட் (Stavelot) நகரில் நேற்று நடைபெற்றது. விடுமுறை நாள் என்பதால் போட்டியைக் காண ஆயிரக்கணக்கானோர் போட்டியைக் காண திரண்டிருந்தனர். முன்னணி வீரர்கள் பங்கேற்று ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு மயிர்க்கூச்செரியும் வகையில் வாகனங்களை இயக்கினர்.
பந்தயத்தின்போது, நிக்கோ ஹல்கென்பெர்க் (Nico Hulkenberg) என்ற வீரர் மோதியதில் முன்னால் சென்ற இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்தன.
பலமுறை சாம்பியன் பட்டங்களை வென்ற வெட்டல், ஹாமில்டன் இருவருக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது.
308 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 23 நிமிடம் 34 வினாடிகளில் கடந்து ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடத்தைப் பிடித்தார்.
கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன் இரண்டாம் இடத்திலும், வெர்ஸ்ட்டாப்பன் 3வது இடத்திலும் வந்தனர். நடப்பு சீசனைப் பொறுத்தவரை 231 புள்ளிகளுடன் ஹாமில்டன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.




