ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே லட்சியம் என பளுதூக்குதல் வீரர் சதீஷ்குமார் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (26). சிறந்த பளுதூக்குதல் வீரரான இவர் 2014 (கிளாஸ்கோ) மற்றும் 2018 (கோல்டு கோஸ்ட்) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் அவர் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த நிலையில் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தன்னை தயார் செய்து வருகிறார்.
பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ‘முழு உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்கத் தயாராகிவிட்டேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம். அதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். இதற்காக சிலர் உதவி செய்து வருகின்றனர். அரசு சார்பாகவும் உதவி வழங்கப்பட்டு வருகிறது. திருமணம் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இதில் பெற்றோர் தான் முடிவு செய்வார்கள்’ என்றார்.




