யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை அணி தகுதி பெற்றது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 2வது அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் நேற்று முன்தினம் மோதின. டாசில் வென்ற ஆப்கன் யு-19 அணி முதலில் பந்துவீசியது. இலங்கை யு-19 அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்தது. அபாரமாக விளையாடிய நுவனிடு பெர்னாண்டோ 111 ரன் (129 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 48.3 ஓவரில் 178 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ரகமதுல்லா 46, இஜாஸ் 37, பசீர் கான் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். இலங்கை பந்துவீச்சில் துல்ஷன் 4, சேனரத்னே, பரணவிதனா தலா 2, வெல்லாலகே 1 விக்கெட் வீழ்த்தினர். 31 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெற உள்ள பைனலில் இந்தியா – இலங்கை யு-19 அணிகள் மோதுகின்றன.




