சீன ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் அனஸ்டேசியா செவஸ்டோவாவுடன் (லாட்வியா, 20வது ரேங்க்) நேற்று மோதிய வோஸ்னியாக்கி (2வது ரேங்க்), அதிரடியாக விளையாடி 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் செவஸ்டோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.
இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.சீன ஓபனில் வோஸ்னியாக்கி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு சீசனில் அவர் வென்ற 3வது பட்டம் இது. ஒற்றையர் பிரிவில் வோஸ்னியாக்கி இதுவரை 30 டபுள்யு.டி.ஏ பட்டங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் செஸ்டினி லவக்கோவா – பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் டப்ரோவ்ஸ்கி (கனடா) – யிபான் ஸூ (சீனா) ஜோடியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.




