இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி, கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இன்று தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்ல காத்திருக்கிறது இந்திய அணி.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிறிஸ் கெய்ல், கேமர் ரோச், சாமுவேல்ஸ் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி பரத்வெயிட் தலைமையில் முதல் டெஸ்டில் களம் இறங்கியது. சொந்த மண்ணில் முழு பலத்துடன் களம் இறங்கிய இந்திய அணியை, மேற்கிந்திய தீவுகள் அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் பிரதிபலனாக அறிமுகப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட, இளம் வீரர் ப்ரித்வி ஷா சதம் அடித்து அசத்தினார். போதாக்குறைக்கு மற்ற வீரர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் சரண் அடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளான அந்த அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நாளை 2வது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கேப்டன் ஹோல்டர், வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் அணிக்கு திரும்பியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. இந்திய அணிக்கு சத்தமில்லாமல் நெருக்கடி கொடுக்க உள்ளதாக கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசையும், பந்து வீச்சும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
இதற்கிடையே, அறிமுக வீரர் ப்ரித்வி ஷாவை, அதிரடி வீரர் ஷேவாக்குடன் ஒப்பிட வேண்டாம் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையை ப்ரித்வி தற்போது தான் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள கம்பீர், அவருக்கு இனி தான் சவால்கள் காத்திருக்கின்றன என கூறியுள்ளார்.
நாளை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும் வேளையில், மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




