இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தாலும், ஒருநாள் போட்டித் தொடரில் ஈடுகொடுத்து விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது.இதைத் தொடர்ந்து, புனேவில் நடந்த 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், மும்பையில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 224 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டியில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக வெல்லும் 8வது இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடராக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக சொந்த மண்ணில் 2006ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி உள்ளது. அதன் பிறகு தொடர்ச்சியாக 7 தொடர்களை இழந்துள்ளது.
Popular Categories




