பிசிசிஐ.,யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி

புது தில்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 2015-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது மிதாலி ராஜுக்கு வழங்கப்படுகிறது.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்ததற்காக வழங்கப்படும் மாதவராவ் சிந்தியா விருதுக்கு கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 ஆட்டங்களில் விளையாடிய அவர் 912 ரன்கள் குவித்துள்ளார்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான விருது கர்நாடகத்தைச் சேர்ந்த வினய் குமார், மும்பையைச் சேர்ந்த ஷ்ரதுல் தாக்குர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. அவர்கள் இருவரும் தலா 48 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

பிசிசிஐயின் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் 5-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. அதில் கோலி, மிதாலி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 27 வயதான விராட் கோலி, தோனியின் ஓய்வைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. இதுதவிர சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. 2015-ல் 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 640 ரன்கள் சேர்த்துள்ளார். 20 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 623 ரன்கள் எடுத்துள்ளார்.

மிதாலி ராஜ், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 2-வது வீராங்கனை மிதாலி.

வாழ்நாள் சாதனையாளர் விருது சையத் கிர்மானிக்கும், சிறந்த கிரிக்கெட் சங்கத்துக்கான விருது கர்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கும் வழங்கப்படவுள்ளன.