ஐசிசி தரப் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை

சென்னை:

ஐசிசி வெளியிட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து ரவிச்சந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களி முதலிடம் மற்றும், ஆல் ரவுண்டர் வரிசையிலும் முதலிடத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.

அஸ்வின் 2015ல் ஒன்பது டெஸ்டில் பங்கேற்று 62 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டும் அவர் 31 விக்கெட் சாய்த்தார்.

கடந்த 1973 ல் பிஷன்சிங் பேடி மட்டுமே ஆண்டின் இறுதியில் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைல்கல்லை அஸ்வின் தற்போது எட்டியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் பகவத் சந்திரசேகர், கபில் தேவ், அனில் கும்பிளே ஆகியோர் அதிகபட்சமாக ஐசிசி தர வரிசைப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளனர்.

அஸ்வின் 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டெயின் 867 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். கடந்த 6 வருடங்களாக ஆண்டு இறுதியில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த ஸ்டெயின், டர்பன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தியபோதும் அது முதலிடத்தை தக்க வைக்க உதவவில்லை. அஸ்வின் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் 15வது இடத்தில் இருந்தார். படிப்படியாக முன்னேறி தற்போது முதலிடத் துக்கு வந்துள்ளார்.

இதுதொடர்பாக அஸ்வின் கூறும்போது, “ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது எனது பந்து வீச்சுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் உள்ளது. 12 மாதங்களில் என்னால் இதை உருவாக்க முடிந்துள்ளது. முதலிடத்தை பிடிக்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். 2015ம் ஆண்டு இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. சுழற் பந்து வீச்சில் தலை சிறந்தவராக திகழ்ந்தவர் பேடி. அவரது பாதையில் நானும் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி கூற விரும்பு கிறேன். அணியின் சக வீரர்கள், நிர்வாகம், பிசிசிஐ ஆகியோரும் பெரிய அளவில் எனக்கு ஆதர வளித்தனர்” என்று தெரிவித்தார்.