ஒரு வென்டிலேட்டரில் 4 பேர் சுவாசிக்கும் வசதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 200 சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் 100 வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையிலே கிருமியின் தொற்று ஏற்பட கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால், மருத்துவமனைகளில், டீன் தலைமையிலான மருத்துவர்கள் வழிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனர். உடை மாற்றக்கூடிய இடம், முகக்கவசம், உடல் கவசம் உள்ளிட்டவையை நோயாளிகள் பார்த்துவிட்டு வந்த பிறகு எப்படி அப்புறப்படுத்துவது என்பதையெல்லாம் சரியாக பின்பற்றுகின்றனர். இது பாராட்டதக்கது. இதை தான் நாங்கள் இன்று ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்.
மேலும் அனஸ்தெஸ்ட் மிகவும் பயிற்சி பெற்றவர்கள். ஒரு வென்டிலேட்டரில் இருந்து நான்கு பேர் சுவாசிப்பதற்கான புது வகையான உத்திகளை சாஸ்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளோம்.
மேலும் சிகிச்சை அளிப்பதற்கு புதிய கருவி மூலம் நவீன யுக்திகளுடன் கையாண்டு வருகிறோம். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பின்பற்றப்படும் முறையே, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பின்பற்ற மருத்துவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிவித்து கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.