தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து வெளியான அறிவிப்பு!
கொரோனா வைரஸ் நோய் (கோவிட் 19)தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது! பிரிவு 76 இன் படி தமிழ்நாடு முழுவதும் ஒரு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளைநோய் சட்டம் 1897-ம் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அரசு தனியார் அலுவலகங்கள் மருத்துவமனைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் பள்ளிகள் கல்லூரிகள் திருமண மண்டபங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் வணிக வளாகங்கள் வழிபாட்டுத்தலங்கள் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மாணவ மாணவியர் மற்றும் வருகை தருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள், திரவ சோப்பு கரைசல் அல்லது கை கழுவும் சோப் வைக்கப்படவேண்டும்.
கட்டிடத்திற்குள் நுழையும் முன்பு வெளியில் செல்லும் முன்பு கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும்.
ஆய்வகங்கள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும்பட்சத்தில் அங்கீகாரம் அல்லது அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்போது முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
நோய்த்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்!
இந்தப் பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897ன் கீழ் கொடுக்கப்படுகிறது மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897 இல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 இன் கீழ் 6 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனைக்கு உள்ளாவார்கள். இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக கருதப்படும்… என்று குறிப்பிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் பெயரில் அறிக்கை இன்று வெளியாகி இருக்கிறது