தில்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்திற்கு பிறகு சொந்த நாடுகளுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்று கண்டறியப்பட்டது. அதில் மொத்தமாக 1,131 பேர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிய வந்த நிலையில், 500க்கு மேற்பட்டோர் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டனர்.
ஆனால், மீதமுள்ள நபர்களை கண்டறிய முடியவில்லை என்றும் அவர்கள் தங்களது செல்போன் எண்களை மாற்றிவிட்டு, வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் முன்னர், அவர்கள் அனைவரும் வந்து சிகிச்சை பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருப்பினும், தில்லி மாநாட்டுக்கு சென்ற பலர் சிகிச்சைக்கு முன்வரவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தில்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.