
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சராசரியாக நாள் தோறும் 55 குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
மேலும், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக அவசர கால சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த ஒரு சிலரின் உடல்நிலை நன்றாக இருந்ததால், மருந்து, மாத்திரைகள் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே சிகிச்சைக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கின் போது கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை என அறிவுறுத்தப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து வந்தனர். இதனால் அரசு மருத்துவமனையை தேடி வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் நாளென்றுக்கு சாராசரியாக 25 முதல் 35 குழந்தைகள் பிறக்கும். தற்போது, கர்ப்பிணி பெண்கள் வருகை அதிகரிப்பால் நாளொன்றுக்கு சராசரியாக 55 குழந்தைகள் பிறக்கிறது. இவர்களில் 90 சதவீதம் பேருக்கு சுகப்பிரசவமே நடக்கிறது. குழந்தைகளின் உடல்நலமும், தாய்மார்களின் உடல்நலமும் நன்றாக உள்ளது.
இவர்களுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளும் உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகிறது. கொரோனா பரிசோதனைகள் செய்த பிறகு, தொற்று இல்லை என உறுதியான பிறகே இந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மகப்பேறு மருத்துவர்கள் கூறினர்.