அணைக்கு அனுமதியும் கொடுத்து, நிதியும் ஒதுக்கி… இப்போ எதிர்த்து களமாடும் திமுக.,!

Published:

budikote dam1 - 2026

“ஜல்லிக்கட்டு, நெடுவாசல், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களில் ஆட்சியில் இருந்த போது செய்தவைகளை மறைத்து, அதன் பின்னர் எதிர்த்தது போல், மார்க்கண்டேய அணையை கட்ட அனைத்து அனுமதியையும் (2007இல்) அளித்து, நிதியையும் ஒதுக்கி, இப்போது கபடநாடகமாடுகிறது திமுக” என்று கூறியுள்ளார் பாஜக.,வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அவர் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளது… : மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசியல் கட்சியினர் மிக ஆவேசமாக பேசி வருவது மீண்டும் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிற செயலே.

அணையை கட்டி விட்டார்களே என்று பதைபதைக்கும் தி மு க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே அணையை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு பக்க பலமாக இருந்துள்ளன என்பதை மறுக்க முடியுமா?

இந்த அணையினை கட்டுவதற்கான திட்டம் 2007ல் துவங்கியது. அணையை கட்டுவதற்கான கர்நாடக அரசு உத்தரவு 2008 ல் பிறப்பிக்கப்பட்டது.

budikote dam2 - 2026

240 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் கர்நாடக அரசின் ஒதுக்கீடு 160 கோடி.. ஊரக கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்திலிருந்து மத்திய அரசின் பங்கு 79.92 கோடி. மேலும், இந்த திட்டத்திற்கான அனுமதியை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகம் அளித்ததையடுத்தே அணை கட்டும் பணி துவங்கியது.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தி மு க ஆட்சி இருந்தது என்பதையும், மத்தியில் தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்பதையும் மறந்து விட்டு பேசுகிறார்களா அல்லது மறைத்து விட்டு பேசுகிறார்களா என்பது புரியாத புதிர்.

பல்வேறு நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்ட போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, 80 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில், 18/05/2018 அன்று கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை கூட மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், நவம்பர் 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாம் என்று அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு மத்திய அரசை இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரிக்கை விடுத்தது.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

அதன் அடிப்படையில் மத்திய நீர் ஆணையம் பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்தை தீர்க்க ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு இரு முறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது கர்நாடக அரசு அணையை கட்டி முடித்து விட்டதாக கூறி மத்திய அரசை குறைகூறுவது கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு, நெடுவாசல், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களில் ஆட்சியில் இருந்த போது செய்தவைகளை மறைத்து அதன் பின்னர் எதிர்த்தது போல், மார்க்கண்டேய அணையை கட்ட அனைத்து அனுமதியையும் அளித்து, நிதியையும் ஒதுக்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய தி மு க மற்றும் கூட்டணி கட்சியினர் தற்போது ‘தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக’ மத்திய அரசை குறை கூறுவது தவறான, மலிவான அரசியல்.

இந்த அணை கட்டுவது தவறென உண்மையில் இவர்கள் வருந்துவார்களேயானால், தாங்கள் ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு துரோகம் செய்ததை ஏற்று கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இரு மாநிலங்களிடையே இருக்கும் நதிகளில் உள்ள அணைகள் குறித்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அணை பாதுகாப்பு மசோதா தெளிவுபடுத்தும் நிலையில், அந்த மசோதாவை எதிர்த்து குரல் எழுப்பி இது போன்ற விவகாரங்களை உடனுக்குடன் முடிக்கும் சட்டத்தை அமுல்படுத்த விடாமல் எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதே, இது போன்ற விவகாரங்களில் தாமதத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து அரசியல் செய்யாமல் மக்கள் நலன் காக்க முன் வரவேண்டும் எதிர் கட்சிகள்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து தமிழக நலனிற்கு ஆதரவாக சிறப்பாக தீர்வு கண்ட மத்திய பாஜக அரசு, விரைவில் இந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டு தமிழகத்தின் நலன் காக்கும்… என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img