அறநிலையத் துறையின் ஆகமம் தொடர்பான சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை!

Published:

1762269 court - 2026

ஹிந்து கோவில்களின் ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட ஹிந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி
சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது.

இக்குழுவில், தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கோவில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சார்பில் நவம்பர் 4ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி டி.ஆர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கோவில்களின் ஆகமத்தை கண்டறிய உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறிக்கும்
வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத தமிழக
அரசு, அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல். ஆகமங்கள் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

ஆகமங்களை அறியாத அவர் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், அவரை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என கூறினார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கடந்த நவம்பர் 4ம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வேறு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களைக் கண்டறிவது தொடர்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related articles

Recent articles

spot_img