
தர்மபுரி மலைவாழ் கிராம பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து இன்று வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
கிராம மக்கள் காட்டுப் குதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992-ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். மேலும் படிக்க தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை சாதியினர்.
இந்த கிராம மக்கள் காட்டுப்பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992-ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அதே ஆண்டு ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர் 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது. வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர். இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீசில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின்போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக்கோரி 1993-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இன்று சம்பவம் நடந்த தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்துக்கு நீதிபதி வேல்முருகன் நேரடியாக வந்து ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தருமபுரிக்கு வந்த நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்துக்கு இன்று நேரில் சென்றார். அவருடன் தருமபுரி கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் உடன் சென்றனர். வாச்சாத்தி கிராமத்தில் இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் பலர் வயது மூப்பால் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள நபர்களிடம் நீதிபதி வேல்முருகன் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.