சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாடத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக்கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடிகள், வார்னீஸ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தேசிய கொடிகள் தயாராகி வருகின்றன. சட்டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புகளில் பொருத்தும் வகையிலான அட்டையால் தயாரிக்கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வருகின்றன.
மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்துடன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகையில் தேசிய கொடிகள், கைகளில் மாட்டிக் கொள்ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய கொடிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையாளர் காசிராஜன் கூறும்போது… “எங்களது அச்சகத்தில் பல்வேறு வகைகளிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரபலமான பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள்.
பொது மக்கள் பயன் படுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்களிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. படிப்படியாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினமன்று தேசிய கொடியை சட்டைகளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது.
இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.
ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடிகள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது.
பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிகளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடிகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.